4. நினைக்கப்படும்
"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது ‘அழுக்காறாமை’ என்ற தலைப்பில் வந்த ஒன்று. அழுக்காறாமை என்பது ‘பொறாமை கொள்ளாமை’ என்பதாகும்.
அழுக்கு ஆறு என்பது கலங்கிய வழி, கெட்ட வழி, தீ நெறி, பொய், பொறாமை என்ற பொருள்களைப் பெற்று, நல்ல ஆறு என்பதன் எதிர்மறையாக நிற்பது.
முன்னே பொறையுடைமை என்ற தலைப்பில் பொறுமையின் பெருமையைக் கூறி, பின்னே வெஃகாமை என்ற தலைப்பில் பிறர் பொருளைத் தவறான வழியில் அடையக் கருதும் இழிநிலையைக் கூறி, இடையில் இத் தலைப்பில் அழுக்காற்றில் வாழ்கின்ற ஆற்றாமை என்னும் பொறாமையின் இழிநிலையை வள்ளுவர் எடுத்து இயம்புவது பெரிதும் நயமுடையதாகும்.
இக் குறளிலுள்ள அவ்விய, செவ்விய என்ற இரு சொற்களும் அடைமொழிகள். அவ்விய நெஞ்சம் என்பதனால், செவ்விய நெஞ்சம் என்பதும் கூறாமற் கூறியதாகக் கொள்ளப்படும்.