பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௦௧இந்நூல் வழக்கொடு 'கற்புடைப் பெண்டிற்குக் கணவனே தெய்வம்' என்னும் உலக வழக்கையும் ஓர்ந்தே, 'தெய்வம் தொழாள்' என ஆசிரியர் இங்கு உரைத்தார், என்க.

அத்துடன், தெய்வம் என்பது வையத்துள் வாழ்பவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (50) என்று இவரே கூறியிருந்தாலும், அதனால், பிற தெய்வங்கள் மனைவிக்கு அயலானவர்களாகவே இருத்தல் வேண்டும் ஆதலாலும், க்ற்புள்ள பெண் தன் கணவனையன்றி வேறு தெய்வங்களைத் தொழ மாட்டாள், என்று கூறினார் என்க.

இனி இவ்வாறு பெண்கள் கொண்ட கற்புணர்வால், மழையையும் பெய்விக்க முடியும் என்ற கருத்தும் அக்காலத்து இருந்தது என்பதற்குக் கீழ்வரும் செய்யுளடி சான்று பகர்கிறது.

'வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்'

- கலி: 116:20

இதில் வானம் மழை பொழிவியாது வறண்டுவிடின், அக்கால், மழையைப் பெய்விக்கச் செய்யும் கற்பை உடையவள் என்னும் கருத்து கூறப் பெற்றிருப்பதைக் கவனிக்க இங்கு 'வான்' என்பது மழையைக் குறிக்கும் 'தரும்' என்பது பெய்விக்கும் என்னும் பொருளது.

எனவே, இதுவரை கூறப் பெற்ற கருத்துகளாலும், காட்டப் பெற்ற சான்றுகளாலும், பெண் கற்பு நிலைக்கு உகந்தவள் என்பதும், அவள் தன் விருப்பமாகக் கணவனை மனத்தால் தொழுவது, அவ்வாறு தொழுது எழுவதும், வழக்கம் என்பதும், ஒருவகையில் அது அவள் தன் கணவன் மேல் வைத்த அளவிறந்த அன்பையும் பற்றையுமே காட்டும் என்பதும், அவ்வாறு பத்திமை கொண்ட பெண் மழையையும் வருவிக்கும் ஆற்றலையும் பெற முடியும் என்பதும், இஃது, அக்காலச் சூழ்நிலையில் மக்களிடம் பரவலாக இருந்து வந்த நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு கருதது என்பதும் அதையே, இக்குறளில் திருவள்ளுவப் பேராசன் குறித்துள்ளார் என்பதும் இஃது பெண்ணடிமைத் தனத்தையோ ஆனாளுமையையோ குறிப்பிடாது என்பதும், நன்கு விளக்கப் பெற்றன என்க.

இனி, 'இல்லறவிய'லில் வரும் 'பிறனில் விழையாமை' அதிகாரத்திலும் பெண்ணிழிவுக் கருத்துகள் சில இருப்பனவாகச் சொல்லப்படுகிறது. அவற்றையும் ஆய்ந்து உண்மை காணுவோம்.

'பிறனில் விழையாமை' என்பது, பிறனுடைய இல்லாளை ஆசையால் விரும்பாமை ஆகும். இதன் விரிந்த பொருளும் விளக்கமும் நூலுரையில் சொல்லப் பெற்றுள்ளன. அவற்றை அங்குக் கண்டு கொள்க.

இங்கு அவ்வதிகாரத்தின்கண் ஆசிரியர் கூறியுள்ளதாகக் கருதும்