பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

௭௩


பொருந்துமாறு பொதுவியல்புகள் கொண்டனவாகப் பெரும்பாலும் இருப்பதில்லை. திருக்குறள் அவ்வாறில்லாமல், அறவியல், அரசியல், பொருளியல், வாழ்வியல், இல்லறவியல், ஆண் பெண் இன்பவியல் முதலிய அனைத்துக் கூறுகளிலும் பொதுமாந்தத் தன்மைக் கூறுகள் பளிச்சிடுமாறு புலப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

தமிழில் உள்ள பல நூல்களும் தொடக்கத்திலேயே உலக நோக்குக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். திருக்குறளும் தன் முதற்குறளிலேயே உலகை முன்வைத்திருப்பதை, அறியலாம். "அறமுதல்வனாகிய இறைவனை முதலாக கொண்டு இயங்குகின்றது. இவ்வுலகம்” என்னும் கருத்தே இவ்வுலகில் கூறப்பெறும் அனைத்து நிலைக் கருத்துகளுக்கும் முதல் கருத்தாக இருத்தல் முடியும் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும்.

ஒரு நூலின்கண் கூறப்பெறும் கருத்துகளை அறியப் புகுமுன், இவ்வுலக இயக்க முதலை அறிதல் அல்லது உணர்தல், படிப்பவர்கள் மனத்தைத் தூய்மைப்படுத்தும் முயல்வாகும். வேறுவேறான மன உணர்வுகளையும், வேறுவேறான அறிவு நிலைகளையும், வேறுவேறான மதக் கோட்பாடுகளையும், வாழ்வியல் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டுள்ள வேறுவேறான மாந்த இன மக்களின் சிதர்ந்து நிற்கும் கலங்கல் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி, நூலுக்குள் தூய்மையான ஓர்மை எண்ணத்துடன் கொண்டு செலுத்தும் பொதுநிலைக் கருத்தாகும் இது.

‘இறைமை என்பது இயற்கை. அதன் பொதுமை இயக்கமே அறத்திற்கு முதல் வடிவம். எனவே இறைமையே இயற்கை; இயற்கையே அறம்; அறமே பொதுமை; பொதுமையே வாழ்க்கை; இதில் வேறுபாடுகள் உண்டு; மாறுபாடுகள் உண்டு; ஆனால் உணர்வு ஒன்றுதான்; அதுதான் பொதுமை, இப்பொதுமை உணர்வு நோக்கியே அனைத்து மக்கள் வாழ்க்கையும் இயங்குதல் வேண்டும் என்பதே பொதுமைக் கொள்கைக்கு மூலமும் வேருமாகும்’ என்னும் தம் தெளிந்த கோட்பாட்டை முதற் குறளிலேயே உணர்த்திவிடுகிறார், மெய்ப்பொருள் அறிஞராகிய திருவள்ளுவப் பேராசான், என்க. இவ்வாறு, தம் நூலுக்கு வாயில் வகுத்தது, அவரின் பேரறிவையே காட்டுகிறது.

இவர் கூறும் பொதுமை - பொதுவுணர்வு. பொதுத்தொண்டு. எல்லார்க்கும் நல்லது செய்வது. இவ்வுணர்வைத்தான் இவர் அறம் என்று கூறகிறார். இவர் கூறும் பொதுவுணர்வெல்லாம் அறம்; அறமெல்லாம் பொதுவுணர்வு. இவ்வாறு பொதுமைக்கே அறம் என்றும், அறத்திற்கே பொதுமை என்றும் இவர் கூறும் உலகப் பொதுமை மிகவும் வியக்கத்தக்கது. வேறு எவரும் கூறாதது. இவர் கூறும் அறவுணர்வுகளை யெல்லாம் ஒருசேரப் பார்க்கின் இவ்வுண்மை தெற்றெனப் புலப்படும். இதுவே தமிழியல் என்று நாம் தெளியவேண்டும். மற்றபடி ஆரியவியல் கூறும் வருணக் கொள்கையையும்,