பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௮௮

முன்னுரை


பொலிவிழப்பதுமில்லை; பொருண்மை குறைவதுமில்லை. ஆனால், இரண்டையும் ஒப்பு நோக்குகையில், பொன் அடங்கியிருந்து அமைந்து பயன்படும் தன்மையது. இரும்பு பரந்துபட்டு எழுந்து நின்று இயங்கும் தன்மையது. இரண்டினும் இரும்புக்கே ஆளுமை (பயன்படுத்தம்) மிகுதி. அதனால், இரும்பு போல் பொன்னும் பலபடு வினைகளில் பயன்பாடு பெறுமோ? பெறாதென்க. எனவே,பொன்னினும் இரும்பு உயர்வாமோ? ஆகாதென்க. இந்நிலைகள் போன்றவைதாம் ஆண்மையும் பெண்மையும்!

ஆண்மை பல எடுப்பு வினைகளில் பயன்படவேண்டிய ஒர் இயங்கியல் தன்மை கொண்டது. அதற்கு இறுக்கமும் முடுக்கமும் திண்மையும் வன்மையும் தேவை. எனவே, அவை இயற்கையாலேயே படைப்புப் பெற்றுள்ளன. பாடு (பயன்பாடு) திறனும் கொண்டுள்ளன. அதுபோலவே, பெண்மை பல படுப்பு வினைகளில் பயன்பட வேண்டிய ஒர் இயங்கியல் தன்மை கொண்டது. அதற்கு நளினமும், பொலினமும், தண்மையும் மென்மையும் தேவை. எனவே அவை இயற்கையாலேயே படைப்புப் பெற்றுள்ளன; பாடு திறனும் கொண்டுள்ளன. இவற்றுள் அவ்வவற்றின் தனித்திறன்களே உலக இயங்கியலாகும். இவ்வியங்கியல் தன்மைகள் கெடும்படி உலகியலில் அவை இயங்குதல் கூடாது. அவ்வாறு இயங்கின், அவற்றின் இருவேறு இயல்பியல் நிலைகளும் தறிகெடும்; ஒன்றுக்கொன்று மாறுபடும்; பின், வேறுபடும்; அதன் பின் ஊறுபடும்; இறுதியில் உலகியல் ஆக்கம் சிதைந்து தேக்கம் உறைந்து நிற்கும் - எனும் இவ்வுண்மைக் கோட்பாட்டினை உணர்ந்து தெளிக.

திருவள்ளுவப் பேராசிரியர், இம்மெய்ப்பொருள் கோட்பாட்டை நன்குணர்ந்தவர். எனினும் உலகியல் அளவான் அவர் அவற்றை அடக்கிக் கூறுதல் வேண்டி அவ்வவ்வாறு அமைத்துக் கூறினார் என்க. என்னை?

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

- 637

என்றாராகலின்.

எனவே, அவர் ஆணாளுமையையும், பெண்ணாளுமையையும் எவ்வெவ்விடத்து எடுத்தும் படுத்தும் பொதிந்து கூற வேண்டுமோ, அவ்வவ்விடத்து அஃததற்கு இயைபக் கூறினார் என்க. அவ்வகையில் அவர் ஆணாளுமையைச் சிற்சில இடங்களில் எடுத்துக் கூறினார் எனல் வேண்டும் அவ்விடங்கள் வருமாறு:

1) இறைமையை அவர் ஆண்வடிவமாகவே கற்பித்தது

(எ-டு) :

அ) ஆதி பகவன்