பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

227

அ - 2 - 3 - மக்கட்பேறு - 6

குள்ளாகியதுமான தமிழியல் மெய்ம்மக் கொள்கைகளையும், கலை, பண்பு, நாகரிக வழக்கியல்களையும், தம் நூலின்வழி, அழுத்தமாகத் தம் கருத்துகள், எதிர்காலத் தமிழினப் பிறங்கடையினர்க்குப் போய்ச் சேரும் வகையில் நிலைநாட்டவும் முற்பட்டவராகிய நூலாசிரியர், இவ் வேழ்பிறவிக் கொள்கையைக் கண்டிதமாகப் பின் பற்றியிராரென்பது பனிமலையன்னவும் பரிதி யன்னவும் உறுதியெண்க -

அஃதன்றியும், உயிர், பிறவி என்னும் இம் மெய்யியல் கருதுதல் கோட்பாடுகள், அறிவியல் அடிப்படையில் எண்பிக்கப்பெறும் வரையில், அவற்றின் உண்மைகளை இஃதிற்றெனத் தெளிவாக எவராலும் கூறுதற் கியலாது எனவும் கொள்க. அது வரை நூலாசிரியர் பலரும் ஒருவர்க்கொருவர் இவ்வகைப் பொருள் நிலையில் தம்முள் வேறுபடவும் மாறுபடவுமே செய்வர். அவ்வகையுள் இந் நூலாசிரியரையும் ஒருவராகவே கருதுதல் வேண்டும். -

அஃதவ்வாறாக, இவர்தாம் அம் மூன்று சொல்லாட்சிகளையும் பயன்படுத்திய ஆறு இடங்களிலும், ஏழோ அல்லது பலவோ ஆகிய தலைமுறைகளையோ, வாழ்நாள், வாழ்நிலை, வாழ்க்கை அல்லது தோற்றம் என்பவற்றையோ பொருளாகக் கொண்டார் என்று ஒட்டு மொத்தமாக முற்ற முடிந்த முடிவாக மாறுபட்டுரைப்பது ஆகாதென்க அஃது இற்றை எம் கால அறிவியல் வளர்ச்சிக்கண் நாம் பெற்ற வேதியல், விளங்கியல் அறிவை, அற்றை அவர் காலக் கருதுதல் அறிவொடு உறழ்ந்து உரைக்கும் குற்றமுமாகும் என்க. -

நூலாசிரியரின் பல்பிறவிக் கொள்கை அவர் வகையில் மிகவும் உறுதியான ஒன்று. அதைத் தம் வழிக்கு எவரும் திரித்துரைத்தல் சாலாது. உரையாசிரியர் நெறியும் அஃதன்று. அஃது அறிவுக் கசண்டு மாகும் என்க.

எனவே, நூலாசிரியரின் பல்பிறவிக் கொள்கை உண்மையும், ஏழ்பிறவிக் கொள்கை இன்மையும் அடிப்படையாகக் கொண்டு இவற்றிற்குப் பொருளுரைத்தலே நடுவுநிலை சான்றது.

- தாம் உடன்படாக் கொள்கையில், தம் வழிக்குப் பிறரை வலிந்திழுத்திறுத்துதல், அறிவின் முரட்டுத் தன்மையாகவும், இவ்வற நூலுள் கூறப்பெற்ற கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற, வல்லது உம் ஐயம் தரும் (843) என்னும் மெய்யுரைக்கு ஏற்ற சான்றாகவும் அமையும் என்க. இனி, அவ்வாறு துணிதற்கு மெய்யறிவினர் அஞ்சுவர் என்றும் கொள்க.