பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

243

அ - 2 - 3 மக்கட்பேறு - 6

2.இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல்: இவன் இவ்வாறு அனைத்தாலும் சிறந்து விளங்க, இவன் தந்தை என்னென்ன வகையில் பாடு பொறுத்தானோ" என்று பிறர் வியந்து கூறும் உரையைப் பெற்றுத் தருவது. - இங்கும் தந்தை என்றது, தாயையும் அடக்கி, பெற்றோர் என்றே பொருள்படும்.

- நோற்றல் - பொறுத்தல், கொல் வியப்பிடைச் சொல்.

- நோற்றான் கொல் எனும் சொல்: ஒரு மகன் அல்லது மகள் பிறந்த பொழுதினின்று, கல்வி, கேள்வி, ஒழுக்கம், உடலோம்பல் எனப்பல வகையான், ஊட்டியும், காத்தும், உரைத்தும், பேணியும் புரந்து வளர்த்து ஆளாக்குதற்கும், பின்னர் வாலைப் பருவத்துத் தக்க துணையைத்தேடி மனங்கொண்டு வாழ்வு அமைத்தற்கும், பெற்றோர் பலவகையானும் பாடுபடல் வேண்டியுயள்ளதன்றோ? அத்தகு பாடு களுக்கிடையில் அவர்கள் மனத்தானும், அறிவானும், உடலானும், பொருளானும் எத்தனை யெத்தனைத் துன்பங்களையும் துயரங் களையும் சுமைகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது! இப்பொறுத்தல் குணம்தான் பெற்றோர்க்கே உள்ள சிறப்புத் தன்மையாகலின், பிள்ளைகளின் பெருமை நிலைகளைப் பார்க்கும் ஒவ்வொருவரும், இப்பிள்ளையை இவ்வாறு சிறப்புற வளர்த்து வாழ்வித்தற்கு, அவர் பெற்றோர் என்னபாடுகள் பட்டனரோ, என்னென்ன துன்பதுயரங்களையும் பொருட் சுமைகளையும் தாங்கிக் கொண்டனரோ” என்று அவர்மேல் இரக்கமும், அவர் கடமைக்கும் எடுததுக்கொண்ட பொறுப்பு முயற்சிக்கும் பாராட்டும் பெருமையும் வியப்பும் தோன்றக் கூறும் கூற்று என்க.

- இத்தகு நோற்றல் முயற்சிகளே உலகியலளவில் உணரப்பெற்றும் பேசப்பெற்றும் வருவது இயல்பாயிருக்க, ஆரியவியலுக்கும், காடு சென்று துறவு மேற்கொண்டு பிள்ளை வேண்டித் தவமிருந்து பெறவேண்டும் என அவர் கூறும் இயம நியமங்கட்கும், வலிவும் பொலிவும் ஊட்ட வேண்டியே, இக்கூற்றுக்குப் பரிமேலழகர், "தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார், இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான் கொல்லோ என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல்” என்று, நல்ல மக்களைப் பெற உலகில் அனைவரும் தவம் செய்யவேண்டும் என்னும் ஆரியக் கூற்றை உலகியலாக்க வேண்டும் என்னும் கருத்திற் பொருள் கொண்டார் என்க. அது மக்களை மருளச் செய்து மதிமயக்கும் ஒரு பிழைப்பு உத்தியாகும் என்று கூறி அப் புனைபொருளைத் தவிர்க்க