பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

43


தாய் தந்தையரும் கற்பனையே!

இனி, நம் தாய்தந்தையர் போலவே மற்றவர்களும், மற்றவையும்கூட நம் கற்பனையாலும், அல்லது பிறர் கற்பித்ததாலும், அவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட நம் நம்பிக்கையாலுமே, நமக்கு அறிமுகமானவர்களே, அறிமுகமானவையே என்க. என்னை? நம் உடன் பிறந்தவர்களையும் நம் தாய்தந்தையர்தாம் பிறப்பித்தார்கள் என்பதற்கும் என்ன உறுதி? நாம் அதைப் பார்த்தோமோ? இல்லை, வேறு சிலர் பார்த்ததும், நம் தாய் கூறியதும் நம் உடன்பாட்டுக்கு உறுதுணையாயின. பிறப்பறையில்கூட நம் தாய்க்குத் தெரியாத வகையில், நம் உடன்பிறந்ததாக நம் தாய்க்குப் பிறந்ததாக நாம் கருதிக் கொண்டிருப்பவர்கள், மாற்றப்பெற்றவர்களாக இருந்திருக்கலாமன்றோ எண்ணிப் பார்க்க இனி இவர்களைப் பற்றியே நிலை இவ்வாறிருக்க, மற்றவர்களைப் பற்றியும், மற்றவற்றைப் பற்றியும், இந்த வகையில் எண்ணிப் பார்க்கத் தேவையில்லை என்பதும், அவ்வாறு எண்ணிப் பார்த்தாலும் இதே முடிவுதான் என்பதும் உணர்ந்து கொள்க.

கற்பனை, நம்பிக்கை, விருப்பம்:

இனி, இந்தக் கற்பனையுணர்வையும், நம்பிக்கையுணர்வையும் இன்னொரு வகையாகவும் விளக்கலாம். நாம் ஒருவரை விரும்புகிறோம் அல்லது ஒரு பெண்ணைக் காதலிக்கிறோம். அதற்கீடாக அவரும், அல்லது அவளும் நம்மை விரும்புகிறார், அல்லது காதலிக்கிறார் என்று, நாம் கற்பனைசெய்து கொள்வதும் நம்புவதும் போன்றதுதான், அதுவும். ஆனால், உண்மையில் நாம் ஒருவர்மேல் கொண்ட விருப்பமும் அல்லது அன்பும் அல்லது காதலும், உண்மையாகவும் இருக்கும், பொய்யாகவும் இருக்கும் என்பது, அவரவர்மன நிலைகளையும், அறிவு நிலைகளையும், சூழலையும், வாய்ப்பு வாய்ப்பின்மைகளையும் பொறுத்த செய்தி. இவற்றைப் போன்றதுதான், இறைமை அல்லது கடவுள் கற்பனையும் நம்பிக்கையும். 'உண்டெனில் உண்டு; இல்லெனில் இல்லை - எனும் மனவியல் மெய்ம்மம்தான் இதிலும் செயல்படுகிறது. இவ்வகையில் அறிவுணர்வு மனத்துக்கு அடங்கிவிடுகிறது. அல்லது அதை நம்பிவிடுகிறது. எனவே, பலர் அதன் உண்மைகளைப் பற்றியோ பொய்களைப் பற்றியோ சிந்திப்பதில்லை. தாயாக இதுவரை நாம் நம்பிக்கொண்டு அல்லது கருதிக்கொண்டு இருப்பவர், உண்மையிலேயே நம்மைப் பெற்றவராக இருந்தாலும் பெறாதவராக இருந்தாலும், வளர்ந்தவராக இருந்தாலும், வளர்க்காதவராக இருந்தாலும், அன்பு காட்டுபவராக இருந்தாலும், வெறுப்பவராக இருந்தாரும், உதவுபவராக இருந்தாலும், உதவாதவராக இருந்தாலும், தாய்தான் என்று நாம் நம்புகிறோம். அதனால் நாம் ஏதிலியில்லை - அனாதையில்லை - நாமும் இக்கால் நம்மைச் சுற்றியுள்ள