பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


தெரியவில்லை. பதிற்றுப்பத்தின் முதற் பத்து கிடைக்காமையால் கடவுள் வாழ்த்துப் பற்றித் தெரிய வாய்ப்பின்றிப் போய்விட்டது. பரிபாடலின் முதற்பாடலே கடவுளை வாழ்த்தும் பாடலாக அமைந்துள்ளது.

இவற்றிலிருந்து, கழகக் காலத்திலேயே, அஃதாவது தொல்காப்பியர் காலத்திலிருந்தே கடவுள் வாழ்த்து இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அதைப் பாடித்தான் நூல்களைத் தொடங்கியதாகத் தெரியவில்லை. அது, பாரதம் பாடிய பெருந்தேவனார் காலத்திலிருந்துதான் தொடங்கியிருத்தல் வேண்டும். பெருந்தேவனார் காலம் உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியவரசன் காலம். அவன் காலத்தில் சேரநாட்டை மாவெண்கோ என்பவனும், உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டை இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஆண்டு வந்ததாகத் தெரிகிறது. அவர்கள் காலத்தில்தான் சிலப்பதிகாரக் கதையும் நிகழ்ந்ததாகவும் தெரிய வருகிறது. இனி, இந்த உக்கிரப் பெருவழுதியின் பேரவையில்தான், கடைக் கழகத்தில் திருக்குறளும் அரங்கேறியதாகக் கதை வழங்குகிறது. இதற்குத் திருவள்ளுவமாலையில் உக்கிரப் பெருவழுதியின் பாடல் மூன்றாவது பாடலாக உள்ளதைச் சான்றாகச் சொல்லுகின்றனர். இவன் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டு என்பர். எனவே, திருவள்ளுவரின் காலத்தையும் கி.பி. 3ஆம் நூற்றாண்டு என்று பின் தள்ளி வலியுறுத்திக் கூறுவர். ஆனால் மொழியறிஞர் பாவாணர் தம் திருக்குறள் தமிழ் மரபுரையின் கால ஆய்வுரையில் பல்வேறு வலிந்த காரணங்களைக் காட்டித் திருவள்ளுவர் காலத்தை கி.மு. 2 முதல் கி.மு. 5 வரை நீட்டித்துச் சொல்லுவார். இஃது இவ்வளவில் நிற்க.

கடவுள் வாழ்த்துப் பெயர் மாற்றம்:

இனி இத்துணைச் சூழல்களிலும், அஃதாவது தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து முறை நூலுள் கூறப் பெற்றிருந்தும் (ஆனால் தொல்காப்பியத்துள், கடவுள் வாழ்த்து இல்லை திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தாகப் பாடாமல் பொதுவாக இறையுணர்வை நினைந்து கூறியதாக உள்ளதை மறுத்தல் இயலாது. வணங்குதல் வேறு வாழ்த்துதல் வேறு. ஆனால் கடவுள் வாழ்த்து வழக்கூன்றிய நிலையில், இதற்குப் பரிமேலழகர் உள்ளிட்ட பத்து உரையாசிரியர்கள் உரை (பரிமேலழகர் அனைவர்க்கும் பிந்திய காலத்தவர். கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகலாம் எழுதிய பொழுதுதான், இவ்வதிகாரத்திற்குக் கடவுள் வாழ்த்து’ என்று பெயரிட்டிருத்தல் வேண்டும். ஆனால், இவ்வதிகாரத்திற்கு நூலாசிரியர் இட்ட பெயர் கிடைக்கவில்லை. அதைக் கருதலளவானும் அனுமானத்தானும் கூட உறுதிப்படுத்த வியலவில்லை. எனினும், அவர் கடவுள் என்னும் சொல்லை, இந்த அதிகாரத்தில் மட்டுமன்றி, நூலுள் வேறு எங்குமே சுட்டாமையால் இதற்குப் பிற்காலத்து, அறிவியல் வளரப் பெற்ற நிலையில், உரையெழுதிய புலவர் சிலர், பெற்றோர் பெயரிடாத