பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அ-2-17 தீவினையச்சம் -21



- துன்னற்க : பொருந்தற்க. துன்னல் - பிரிவின்றிப் பொருந்துதல்.

’துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்’ - 188

'துன்னியார் துன்னிச் செயின்’ - 494

'துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா’ - 1250

‘அன்னோள் துன்னலம் மாதோ’ - அகம்: 258:4.

'துன்னல் போகிய துணிவி னோன்என’ - புறம்: 23:14

‘எம்நலம் தொலைவ தாயினும்
துன்னலம் பெரும பிறர்த்தோய்ந்த மார்பே’ - ஐங்: 63:3-4

'புலியினம் மடிந்த கல்லளை போலத்
துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்’ - புறம்: 398:10-11

3) தீய வினைகளில் ஏதாவது ஒன்றிலேனும் தொடர்பு கொள்ளாமல் இருப்பவரே, தனக்குற்ற தனி நலன்களைப் பெற்று மகிழ முடியும். இல்லெனில் தம் தனிநலன்களை இழப்பதுடன், தீவினைக்குரிய எதிர்விளைவுகளையும் பெற்று மிகவும் துன்பப் படநேரும் என்பார்.

4) தாம் தமக்குரிய நலன்களையும் அவற்றால் மகிழ்வையும் விரும்புவதுபோலவே, இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் தனி நலன்களையும் மகிழ்வையுமே விரும்புவர். ஆதலால், பிறர்க்குத் தீமைசெய்ய நினைப்பவரும் செய்பவரும், பிறரின் நலன்களையும் மகிழ்வையும் கெடுப்பதுடன், தாமும் அவற்றால் தம் நலன்களையும் மகிழ்வையும் கெடுத்துக்கொள்வதுடன், செய்யப்பட்ட தீமைகளுக்குரிய துன்பங்களையும் தாம் பெற்றாக வேண்டியிருக்கும் என்பது இங்கு ஏரணமுறையிலும் பொதுஅறமுறையிலும் உணர்த்தப் பெற்றது, என்க.

5) தீவினைகள் செய்பவர்க்கு உறுதியாகத் தீமைகள் வந்து சேரும் என்று முன் குறள்களில் கூறியவர், அவற்றொடு பொருத்தி எண்ணத்தக்க ஓர் உண்மையை மனவியல் படி, வேறு கோணத்தில் கூறி விளங்க வைத்தார். ஆகையால், இஃது அவற்றின் பின்னே வைக்கப் பெற்றது, என்க.


உக0. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். - 210

பொருள்கோள் முறை:

மருங்கோடித் தீவினை செய்யான் எனின்
அருங்கேடன் என்பது அறிக.