பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

121


நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக் கிறைப்பரோ போய்.” - நன்னெறி: 36

- என்றார் பிறரும்.

வேளாண்மை : உற்றுழி உதவுதல்.

- (இதன் விரிவான பொருளை 81ஆம் குறள் விளக்கவுரையில் காண்க)

- பிறர்க்குப் பொதுமையறம் கருதி உதவுதல் தன்மை தாளாண்மை முயற்சியின் பாற்பட்டது என்பதை நூலாசிரியர் மிகவும் வலியுறுத்திக் கூறுவார்.

- இதே பொருளில் அவர்முன்னரே

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு’ - (81)

என்று கூறிய கருத்தும், இத்துடன் ஒப்பவைத்துக் கருதத் தக்கது, என்க.

- அத்துடன், ஆள்வினை உடைமை அதிகாரத்துள், அவர் கூறவரும்,

‘தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு’ - (613)

‘தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்’ - (614)

- இரு கருத்துகளிலும் உலகப்பொதுமை அறம் கருதுவான் தன்முயற்சியும் ஊக்கமும் உடையவனாக இருத்தல் வேண்டும்.

- தன் முயற்சியால் அவர் பொருள்திரட்டி அதைக் கொண்டுதான் தக்கார்க்கு உதவுதல் வேண்டும்;

- அப்பொழுதுதான் அவ்வறம் தொய்வின்றித் தொடர்ந்து நடக்கவும் முடியும்; பெருமையும் பெறமுடியும்;

- அதுவன்றிப் பிறரிடம் பொருள் தண்டியோ, வேறு தவறான வழிகளில் பொருளை ஈட்டியோ, பொதுநலம் அறத்தொண்டு செய்ய ஒருவன் முற்பட்டால், அவ்வூற்றம் கிடையாத விடத்து அத்தொண்டில் சோர்வும், இழுக்கும் ஏற்படும் என்பதை ஆசிரியர் நுண்மையாக உணர்த்துவர். இதனை,

' நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று' - (222)

- என்று அறவுணர்வின் பழுதற்ற துய்மையை விளக்குவார்.