பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

133


வேண்டும் என்பதும் உய்த்துணரப் பெறுகிறது. என்க.

நீர்நிறைந்து அற்று. மக்கள் நன்கு பயன்படுத்துவதற்குரிய வகையில் நீர் நிறைந்திருந்தது போல்வது.

- ஊருணியைப் பேரறிவாளனுக்கும் அதிலுள்ள நீரைச் செல்வத்திற்கும் உவமைப் படுத்தினார் என்க.

- மக்கள் உண்ணும் நீர்நிலையை, வள்ளண்மை உடையவர்க்கு உவமை கூறும்வழக்குப் புலவர் பிறரிடமும் இருந்துள்ளது, அறியப் பெறுகிறது.

'தீஞ்சுனை நிலைஇய திரு’ - பதிற்று 85.6

‘உண்ணிர் மருங்கின் அதர்பல வாகும்’ - புறம்: 204:9

- இதன்வழி, பேரறிவாளன் திரு வ'ிடரகத்துக் கட்டிய தேன்கூடு' போல் அணுகுதற்கு அரியதன்று; அது ஊர் மருங்கின் தோண்டிய ஊருணி நீர்நிறைந்தது போல் கொள்ளுதற்கு எளியது என்று பயன்எளிமையும் பயன் பொதுமையும் புலப்படுத்தினார் என்க.

3) இஃது, ஒத்தறியும் பேரறிவாளனது ஈட்டம் மக்கள் கொள்ளுதற்கு எளியது என்று முன்னைய குறளுக்கு இயைபுபடுத்திக் கூறியதால், அதன்பின் இதனை நிரல்படுத்தினார், என்க.


உக௬. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். - 216

பொருள்கோள் முறை:

செல்வம் நயன் உடையான்கண் படின்,
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றுஆல்.

பொழிப்புரை : செல்வம், பொதுமை உணர்வுடைய நடுநிலையாளன் ஒருவனிடத்து வந்து சேருமாயின், அஃது, எல்லார்க்கும் பயன்தரும் நன்மரம் ஒன்று ஊரின் நடுவில் பழுத்து நின்றது போலாம், என்க.

சில விளக்கக் குறிப்புகள்:

1) செல்வம் நயன் உடையார்கண் படின் : செல்வம், பொதுமை உணர்வுடைய நடுநிலையாளன் ஒருவனிடத்து வந்து சேருமாயின்.

நயன் உடையான்கண் :பொதுமை உணர்வுடைய, நடுநிலையாளன் ஒருவன் இடத்து.