பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

37



இரண்டு, அவர்களில் பலரும், பிறர் குற்றங்களைப் பெரிதுபடுத்தி மற்றவர்களிடம் புறங்கூறுகின்றனர் - என்பது.

மூன்று, அவ்வாறு புறங்கூறுகிறவர்கள், பிறர் குற்றங்களைப் போல், தங்களின் குற்றங்குறைகளைக் காணாமல் இருக்கின்றனர் - என்பது.

நான்கு, அவர்கள், அவ்வாறு தங்கள் குற்றங்குறைகளையும் உள்நோக்கிக் காணுவார்களாயின், அவர்கள் பிறரைப் பற்றிப் புறங்கூறும் அறக்கேட்டைச் செய்யமாட்டார்கள் - என்பது.

ஐந்து, அப்படி நிகழின், உலகில் நிலையான மக்கள் உயிர்களுக்கு நேரும் தீமைகள் நேரமாட்டா - என்பது.

3. உலகில், மக்களாகப் பிறந்த உயிர்களுக்கு நேர்கின்ற தீமைகளுள் பெரும்பாலானவை, புறங்கூறதலால் நேர்கின்றன என்பது, ஆசிரியர் கருத்து, என்னை?

- புறங்கூறுகிறவன் பொய்கூறுகிறான் (182, 183); அறவுணர்வைக் கெடுக்கிறான் (185); மக்களுக்குள் நட்புணர்வையும், நல்லிணக்கவுணர்வையும் அழிக்கிறான் (187); அதனால் சமநிலை உணர்வு கெடுகிறது (180); புறங்கூறுதலுணர்வால் பயனில்லாதவற்றைப் பலரிடமும் கூறவேண்டி உள்ளது (191); அதனால் மக்கட் பண்பு கெடுகிறது (194); நயன்மை (ஞாயம்) கெடுகிறது (193); தீங்குகள் நேர்கின்றன (190); தீவினைகள் மிகுகின்றன (தொடர் அதிகாரம் - தீவினையச்சம்), என்கிறார் ஆகலின்.

4. ஏதிலார் குற்றம் போல் - பிறருடைய குற்றங்களை ஒருவன் புறம் நோக்கிக் காணுவது போல்.

ஏதிலார் - தொடர்பற்ற பிறர்.

5. தன் குற்றம் காண்கிற்பின் தன்னுடைய குற்றங்களையும் அவன் அகம்நோக்கிக் காணுவானாயின்

- தன் குற்றத்தைத் தன் அகம் நோக்கிக் காணுதல் வேண்டும்.

- தன் குற்றத்தை நீக்கிக் கொண்டு பிறர் குற்றத்தைக் காணுதல் வேண்டும் என்பது பொது நெறி, என்னை?

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு’ - 436

‘தன்நெஞ்சம் தான் அறி குற்றம்’ - 272

‘குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான்’ - 502

'தம்வயின் குற்றம் மறையா வழி' - 846