பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

49


நிறைபொருளாம். என்னை? 'வெறுஞ்சொற்கள்' பயனையோ, பயனின்மையையோ உணர்த்தா வென்க.

- மேலும் 'பயனில’ என்பதனுள் 'தனக்கும் பிறர்க்கும்' என்பதடங்கும், என்க.

3) எல்லாரும் எள்ளப் படும். இறுதியில் எல்லாராலுமே இழிவாகப் பேசப்படுவான்.

எல்லாரும் என்பதனுள். அவனை முனிந்த பொரும்பான்மையினரும், விரும்பிய சிறுபான்மையினரும் ஆகியர் சேர்ந்த எல்லாருமே எனும் பொருள் அடங்கும் என்க.

- இனி, மக்களுள் பலதரத்தினரும் என்பதும் அதில் இணையும்.

- இதற்குப் பரிதியாரும், காலிங்கரும் அவர்கள் பொருளில், 'வேண்டினபேரும் வேண்டாத பேரும்' எனப் பொருள் விரிப்பர்.

‘எல்லாராலும்' என்பதை ‘எல்லாரும்' என்றது செய்யுள் நோக்கிவந்த வேற்றுமைத் தொகை.

எள்ளப்படும்: இழிவாகப் பேசப் படுவான்; இகழப்படுவான்.

- பாவாணர், 'எள்ளுதல் மனத்தின் செயல்' என்று கூறி, 'இழிவாய் எண்ணப்படுவான்’ என்று மட்டில் கூறி முடிப்பார். அது குறையாம். 'அவரவர் எண்ணிக்கொள்வதால் இழிவும் இகழ்ச்சியும் தோன்றா' என்க.

4) இது, பயனில சொல்லுவான், குமுகாயத்துள் அனைத்துத் தர மக்களாலும் வெறுக்கப்பட்டு இழித்துரைக்கப் படுவான் என்று பொதுவான தீமை கூறியது.


கசு உ. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது - 192

பொருள்கோள் முறை:

பல்லார்முன் பயனில சொல்லல்,
நட்டார்கண் நயனில செய்தலின் தீது.

பொழிப்புரை : பயனில்லாதவற்றைப் பலரிடமும் சொல்லித் திரிவது, ஞாயமில்லாதவற்றை நண்பர்களிடம் செய்வதைவிடத் தீமை பயப்பதாகும்.