பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

போற்றுமுன் சிங்கி போன

புதுத்தெரு இதுகண் டாயே.

(ஆறு - செல்லும் வழி. கடத்தி விடுதல் - வழி கடத்தல். தேற்ற - தெளிவாக)

38. எங்கே போனாளோ?

எங்கேதான் போனாளோ அப்பனே! என் சிங்கி! இப்போது எங்கேதான் போனாளோ அப்பனே! எலும்பா பரணம் அணிந்தவர் திரிகூடத்து இறைவன்; அவருடைய நாட்டிலே அவள் எங்கேதான் போனாளோ அப்பனே!

அவன் மதனவேளேயானாலும் அவனையும் மயக்கங் கொள்ளச் செய்பவள். எவனையும் வலியத் தட்டி அழைத்து அவனைக் கேளாமலேயே அவனைத் தழுவுபவள். ஆளாய், அழகனுமாய் எவனை எங்கே கண்டாளோ? ஆண்களுடைய தோளுக்கு ஆசைப்பட்ட சிங்கி கண்டால் சும்மா கிடக்க மாட்டாளே? ஐயோ! அவள் இப்போது எங்கேதான் போனாளோ? உண்மையாகப் பலிக்கும் குறிகளைச் சொல்லி எவ்விடத்திலும் வெற்றிக்கொடி நாட்டுவாளே! மனத்திலே நினைத்த குறிப்புகளையும் கண்டு சொல்லுவாளே! அவள் குறியின் சிறப்போ ஒரு திசைக்குள் அடங்காது. அவளுடைய பேச்சின் இனிமையோ கருப்பஞ் சாற்றிலும் அடங்காது. அவள் விழிப் பார்வையோ இட்ட மைக்குள்ளும் அடங்காதது. என் கைக்குள் அடங்காத அந்தக் கள்ளி இப்போது எங்கே தான் போனாளோ?

சித்திர சபையிலே நடனமிடும் ஈசரின் மேலேயும், சிவ சமயத்தினிடத்தேயும் பக்தியில்லாமல் திரிகின்ற பேயர் களைப் போலே, புட்டியிலே அடைத்து வைத்திருக்கும் சாராயத்தையும், பனங்கள்ளையும், குடுவையிலே வைத்துள்ள தென்னங்கள்ளையும் அவ்வளவையும் குடித்துப் போட்டு, அந்த வெறியிலே யார் பின்னாலே அவள் போனாளோ? என் சிங்கி இப்போது எங்கேதான் போனாளோ?