பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்புகழ்

மெய்ப்பொருள் தெளிவுரை



சிறப்புப் பாயிரம்

எல்லாரும் ஞானத் தெளிஞரே கேளிர் சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ - பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கான மயில்வீரன்
திருப்புகழைக் கேட்கும் செவி.

உண்மை அறிவின் தெளிவை உடையவர்களே இங்குக் கூறப்படுவதை நீங்கள் எல்லாரும் கேளுங்கள்! சொல்லப்பெறும் கற்கள் எல்லாம் கல் என்னும் பெயரினது அளவில் ஒத்திருந்தாலும் மாணிக்கக் கல்லுக்குச் சமானமாகுமோ? ஆகாது. அதுபோலக் காட்டில் வாழும் மயிலை வாகனமாக உடைய, வீரத்தன்மையைக் கொண்டுள்ள குமரக் கடவுளது அழகிய சிறப்பை, அதாவது முருகப்பெருமானின் இசையைக் கூறும் வண்ணப் பாட்டாகிய திருப்புகழ் என்னும் இச் சீரிய நூலை கேட்கின்ற காதுகள், பிறப்பினுக்குக் காரணமாக இருக்கும் கொடிய, கொடுந் துன்பங்களுக்கு ஏதுவாகிய் இழிந்த பிறப்புடைய மனிதர் புகழைக் கேட்கச் செய்யுமோ? கேட்கமாட்டாது.