பக்கம்:திருப்புமுனை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த மாணிக்கம் ஒவிய வகுப்பில் படம் வரைந்து கொண்டிருந்தான். கண்ணாயிரம் தனக்குப் படம் வரைந்து தருமாறு மாணிக்கத்தை உதவிக்கழைத்தான். அதற்கு மாணிக்கம் தனது படத்தை வரைந்துவிட்டு பிறகு உதவுவதாகக் கூறினான். பொறுமை இல்லாத கண்ணாயிரம் அவனைப் பார்த்து மோசமான வார்த்தைகளால் திட்டினான். அதைக் கேட்டு கோபத்தால் உணர்ச்சிவசப்பட்ட மாணிக்கம் வழக்கமாக வரும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கைகால்களை இழுத்துக் கொண்டு பெஞ்சியிலிருந்து கீழே விழுந்தான். வாயில் நுரை நுரையாக வர, ஆசிரியரும் வகுப்புத் தலைவன் இனியனும் பதறிப் போய் அவனைத் துாக்கி ஆசுவாசப் படுத்தினார்கள். பிறகு பூரணமாக நினைவு திரும்பிய மாணிக்கத்தை இனியன் கைத்தாங்கலாக அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அப்போது தன் புத்தகப்பையை பார்த்துக் கொள்ளும்படி தன்னிடம் இனியன் ஒப்படைத்துச்சென்றது ஆகிய அனைத்தும் அடுக்கடுக்காக அருளின் மனத்திரையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. காத்திருந்தவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து தன் புத்தகப்பையை ஒரு தோளிலும் இனியனின் புத்தகப் பையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தபடி நடையை ஒட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/8&oldid=489702" இலிருந்து மீள்விக்கப்பட்டது