பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



'சிருஷ்டி எனும் புனிதப் பணி எப்படி எப்படி யெல்லாம் அலைக்கழியத் தொடங்கி விட்டது. முரடர்களையும் கன்னியையும் வைத்துக் கொண்டு அயல் நாட்டவரான எ.ஜி. கார்ட்னரின் தலையில் கையை வைத்திருக்கிறாரே இந்த மனிதர்? . இம்மாதிரி இலக்கியத் திருடர்களைச் சமுதாயத்தில் அனுமதிக்கவே கூடாது. பேராசிரியர் கல்கி போன்றவர்கள்கூட இப்போது இல்லையே? ஒன்றிலிருந்து வேறு ஒரு சிந்தனை பிடிப்புக் காட்டிற்று. கதை எழுத வேண்டும், தாம் எழுதும் எழுத்துக்கள் எல்லாம் அச்சில் ஏறிவிட வேண்டும் என்று இதே நினைவாகச் சுற்றி அலைந்து தம்மைத் தொந்தரவு செய்த ஊர்க்காரர்கள், வேண்டியவர்கள், அறிமுகம் அற்றவர்களின் ஞாபகத்தைக் குழப்பிவிட்டது. காலம் - பழங்காலம் ! 'கல்கி' அவர்கள் சொன்னது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. எழுத்தாளன் என்ற தகுதிக்கு ஒருவன் லாயக்கா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டுமானால், அவனுடன் ஒரு நிமிஷம் சம்பாஷணை செய்து பார்த்தாலே புரிந்துவிடும் என்பார்கள்; எழுத்தாளர்கள் பெருக வேண்டும், அவர்களுக்குத் தகுதியும் சக்தியும் பண்பும் இருக்கும் பட்சத்தில், எழுத்தாளன் என்றால் அவன் இரண்டாவது பிரம்மா போல, ஊம். இப்போது தான் யார் யாரோ கிறுக்கத் தொடங்கிவிட்டார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் கதைதான் ! வரட்டும், வரட்டும்! புதிய அமைப்பு ஒன்றை நிறுவி, எழுத்தாளச் சகோதரர்களை ஒன்று கூட்டி இதுபற்றி விவாதிக்க வழி செய்தால்தான் நல்லது!'

தீ பிடித்தது - சிகரெட்டில்,

புகை கலைந்தது - நெஞ்சில்.