பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 115



நீங்கள் சொல்ல வந்ததை மாலையில் சொல்லலாமா? இல்லை."

"இல்லை, இல்லை. இப்போது சொன்னால்தான் நல்லது. எனக்காகவோ, என் முடிவுக்காகவோ காலத்தை நிறுத்தி வைக்க முடியுமா? அப்படி நிறுத்தி வைக்கும் கட்டத்திலும் நான் தற்சமயம் இருக்கவில்லை."

முதன் முதலில் பதவிசாகவும் அமரிக்கையுடனும் காற்பெருவிரல் நகம் தரையில் கோடு கிறுக்கி, பார்த்தும் பார்க்காமலும், நாணத்திற்கும் வாரிசு நான்தான்' என்கிறாற் போன்று கம்மென்று இருக்கை கொண்டிருந்த பெண்ணா இப்பொழுது இப்படி பாம்பு சீறுகிற பாவனையுடன் வார்த்தைகளைக் கொட்டுகிறாள் ? கழுத்தை ஒரு சமயம் நோட்டம் பார்த்த அந்தரங்கச் செயல் அவர் நெஞ்சில் குறுகுறுத்தது. கருகு மணிச்சரம் மட்டிலுமே அவளது சிவந்த மேனிக்கு அணிகலன் ஆன உண்மையினையும் அவரால் காண முடிந்தது.

பெண்ணுக்கு அழகுதான் நிதி. ஆனால் அவ்வழகே சமயா சமயங்களில் அவளுக்கு விபத்தாகவும் உருமாறக் கூடும். அப்படிப்பட்ட அழகும் விபத்தும் ஒன்றுகூடி, தற்போது தன்னை ஆட்டிப் படைத்து அம்பலத்தில் நிறுத்தக் கங்கணம் கட்டியிருப்பது மாதிரியாகப் பட்டது ஞானசீலனுக்கு. வாழ்க்கைகூட ஒருவித விபத்துத்தானே? அவரவர் வாழ்வு எப்படிப்பட்ட இக்கட்டுகளைச் சமாளிக்க வேண்டுமென்று விதித்திருக்கிறதோ அவற்றை யெல்லாம் சந்தித்துத்தானே ஆக வேண்டும்? இதற்கெல்லாம் வருந்தலாமா? துன்பத்தையே இன்பமாகக் கருத வேண்டும் என்பது தமிழ் வேதத்தின் வாக்கு முடிய வேண்டாமா?