பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 133



மறக்கப் போகிறேன்? நிலைப்படியில் நின்று கடைக்கண் வீச்சைப் பாயச் செய்து என்னை அளந்தாயே, அந்தச் சாகஸ்த்தைப் புகழ்வதா? மாலையும் கழுத்துமாக என்னைப் பார்த்துப் பரவசம் அடைய விழைந்த அம்மாவிடம் மாலையைக் கொண்டு வந்து கொடுத்து, "உங்க மகனை மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேணும்னு ஆசைப்பட்டீங்களே, அதுக்காகத்தான் இந்த மாலையை வாங்கியாந்தேன்!" என்று உள்ளர்த்தம் வைத்து நயம் பொருந்திய நகைச்சுவையை வெளியிட்டாயே, அந்தக் கற்பனையை மெச்சுவதா? "நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?" என்று மெத்தவும் துடுக்குத்தனம் கொண்டு கேட்டு எனக்குத் தபால் போட்டாயே, அந்தத் தைரியத்தைப் போற்றுவதா? என் அன்பின்பால் உன்னையே அர்ப்பணித்த பெருமையை நீ மனசில் தாங்கியவளாக, எனக்குச் சென்னைக்கு விடை கொடுத்தனுப்பிய தருணத்திலே, 'என் நினைவு ஒன்றுடனே அங்கிருந்து புறப்பட்டு வாருங்கள்! என்று மொழிந்தாயே, அந்தத் தன்னம்பிக்கையைப் புகழ்வதா? கற்பனையில் கூடத் தரிசிக்க முடியாத அவ்வளவு உச்சிக்கு நீ போய் விட்டாயே வாணி? உன்னை நான் எட்டக் கூடாது என்றுதான் அவ்வாறு என்னை விட்டு எட்டாத் தொலைவுக்குப் போய் விட்டாயா? உன்னை மறந்து, நான் உயிர் தரிக்க முடியுமா? அழகின் தத்துவப் பொருளான உன்னை என்னிலிருந்து பிரிக்கும் மாயப் பெருவிதியாகி வந்து நிற்கும் தவசீலியை நான் மணப்பதா?. அப்பனே, சண்முகா!"

மேஜை டிராயரை இழுத்து இழுத்து மூடினார். உன்னிப்புடன் பார்த்துப் பார்த்து விழிகளை மூடினார்.