பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


நெஞ்சு பதைக்க, நிமிர்ந்து எழுந்து நடந்தார். அன்னையின் படம் மஞ்சளும் குங்குமமுமாகத் திகழ்ந்தது. 'அம்மா! அம்மா!' முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு கரைந்து உருகினார்.

வாசற் கதவு தட்டப்பட்டது. சத்தம் கேட்டது. 'கோயிலுக்குப் போன அம்மா திரும்பி விட்டார்களா? நேரம் மிகுதியாக ஆகிவிட்டதா?' என்று நினைவுகளைச் சொடுக்கி முடுக்கிய கதியுடன் கூடத்துக்கு வந்து தாழ்ப்பாளை விலக்கினார். மஞ்சள் வெயிலில் குளித்தவளாக, மஞ்சள் முகம் மஞ்சள் வெயிலில் பொலிவு . பரப்ப, துய அழகின் அவதாரம் எடுத்து வந்தாள்-வாணி!

"வாணி!..." என்று மெய்ம்மறந்த பாவனையுடன் அலட்டினார் ஞானசீலன்.

"ஸார்!"

மருக்கொழுந்து மணம் நாசிக்கு ஏறியது.

"வாணி, நீ இன்று தேவலோகத்துப் பெண்ணாகவே வந்திருக்கிறாய்! இவ்வளவு அன்பும் அந்தமும் கொண்ட உன்னை என்னிடமிருந்து பிரித்து விலக்கிவிட நீ எத்தனம் செய்தாய்? சொல்லமாட்டாயா, வாணி?. சொல்லேன் வாணி! விதி உன் வாயை அடைத்துவிட்டு, உன் தோழியின் வாயைத் திறந்து விட்டதோ? ம்..! விதியாவது, தெய்வமாவது! எல்லாம் இந்த மானிடப் பிறவிகள் ஆடுகிற நாடகம்தான்!"

ஞானசீலனுக்கு வெறி மூண்டது. 'வாணி' என்னும் இன்குரல் ஒலிக்கக் கூவியவாறு அவளை நெருங்கினார்.

"நில்லுங்கள். என் தவசீலியை நீங்கள் மணப்பது குறித்து உங்கள் கடைசி முடிவைக் கேட்டுப் போகவே