பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 135



நான் வந்திருக்கிறேன். அவளுக்கு உடல் நலமில்லை. இரவு தொட்டுப் பச்சைத் தண்ணிரைத் தொடாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். ம்..சொல்லுங்கள்!"

"இதோ என் முடிவைச் சொல்லி விடுகிறேன்!" என்று கிறுக்குக் கொண்டவரெனப் பிதற்றினார். அதன் தொடர்ச்சியாக, வாணியை அண்டி அவளது மென்கரங்கள் இரண்டையும் பற்றினார். பற்று அதிகரிக்க, பாசம் பெருகிக் கொப்புளிக்க அன்பு பண்பாட அவர் அவளைப் பிடித்து இழுத்து நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு வாணியின் துய்மை செறிந்த அழகுக் கதுப்புக் கன்னங்களிலே முத்தம் பதிக்க முனைந்திட்ட வேளையிலே, "நில்லுங்கள்!" என்ற எதிர்ப்புக் குரல் ஒன்றை முன்னோட விட்டுப் பின்னாடி வந்தாள் தவசீலி. அவள் முகம் சோர்ந்திருந்தது.

"சமுதாயத்தின் முதல் காவலன் எழுத்தாளன்தான் என்று பிரமாதமாகச் சொல்லுகிற நீங்களா இந்தப் பயங்கர செயலைச் செய்யத் துணிந்தீர்கள்? மாசு படிந்த உங்களையா நான் என் ஆண்டவனாக மதித்துக் கும்பிட்டேன்! ஐயோ! என்னைப்போல ஒரு அபாக்யவதி இந்த உலகத்திலே வேறு ஒருத்தியும் இருக்க மாட்டாள்!" என்று ஓங்கி ஓங்கி மண்டையில் அடித்துக் கொண்டு அழுதாள் தவசீலி. "நான் கறைபட்டுப் போனேனே!" என்று கதறியபடி தன் பாதங்களில் வந்து விழுந்த வாணியை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டு அவள் கண்களைச் சேலை துணி கொண்டு துடைத்தாள் தவசீலி.

அடுத்தடுத்து நின்ற கோதண்டபாணியும் சோசலை அம்மாளும் செய்வகை புரியாமல் மலைத்துப் போய்க் காணப்பட்டார்கள்.