பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 27



பொருட்டாக ஏன் கருத வேண்டும் !...காதலாவது, மண்ணாங்கட்டியாவது மண் புழுதியில் கண் திறந்து, சாம்பல் புழுதியில் கண் மூடும் இவ்வுலக வாழ்க்கையில் காதலுக்கு முக்கியத்துவம் தர எண்ணுவது எவ்வளவு மதியீனம்! வாழ்க்கையை உணர்ந்து, மனத்தைப் படித்து, அதன் மூலம் உலகத்தைப் புரிந்து கொள்ளப் பிறந்தவனே மனிதன்! இதுதான் என் கருத்து. பேச முடிந்தவன் மனிதனாக இருக்கலாம். ஆனால் செய்ய முடிந்தவனே மனிதனாக இருப்பான். இதுவேதான் வாழ்வின் நியமம் !...'

நெடிய பொழுதாகச் சிந்தித்தவர் போல, மனம் வலிக்க வீற்றிருந்தார் அவர். அடுத்த மாதம் எழுத வேண்டிய தொடர் கதைப் பகுதிக்கான குறிப்பு நோட்டைப் பிரித்து வைத்துக் கொண்டார். சிகரெட் பெட்டி, டிரங்குப் பெட்டியின் அடியில் தூங்கியதை எண்ணிய சமயம் அவருடைய சிந்தனை உணர்வு, பிடரியில் அடிபட்ட செம்மறி போல, சிலிர்த்துக் கொண்டது.

"வாணி எங்கே?" என்று அவர் இதயம் மழலையாகத் தவழ்ந்து, வினயம் ஏதுமின்றி, வெள்ளையாகக் கேட்டு வைக்கவே, அதை ஆதாரமாகக் கொண்டு, அவர் நயனங்கள் அந்தக் குமாரியைத் தேடின. அவளைக் காணோம் : 'வாணி எங்கே? நேற்றுச் சாயந்திரம் வீட்டுக்குப் போனவள், இரவு வர வேண்டாம்; காலை கழியப் போகிறது. இன்னமும் முகத்தைக் கூடக் காட்டவில்லையே? எங்கே?

வாணியைப் பற்றி நினைத்தவருக்கு, அவள் உதிர்த்த வேடிக்கைப் பேச்சும், அந்த வேடிக்கைப் பேச்சிற்கு உத்தாரணம் தந்த அந்தப் பூமாலையும் சிரிப்பையூட்டின.