பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


விழுந்து விழுந்து சிரித்தார். நல்ல வேளை, பல் ஏதும் உடையவில்லை; காயம் ஏதும் படவில்லை. காயம்தான் பொய் என்கிறார்களே ...’

மாடியில் அமர்ந்திருந்த ஞானசீலன், கீழ்த்தளத்தினின்றும் படி தாண்டி வந்த குரல் கேட்டுக் கீழே இறங்கி வந்த சமயம் அங்கே முதிர்ந்து பழுத்தவர் ஒருவர் பெரியவர் என்ற பட்டப் பெயர் துலங்க, கூடத்தில் குந்தியிருக்கக் கண்டார். வணக்கத்திற்கு உகந்தவரை வணங்கினார் ஞானசீலன். ஒரு சமயம், சாது அச்சுக் கூடத்தில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களைச் சந்தித்ததையும், அவருடன் கூட இருந்த டாக்டர் மு.வ. அவர்களைப் பழக்கப்படுத்திக் கொண்டதையும் அவர் இப்பொழுது நினைவு கூர்ந்தார். ஒன்றின் நினைவில் ஒன்பது நினைவுகள் கிளைவிட்டுப் படர்வது நியாயமே !

“உட்காருங்கள். உங்களை நான் ஏற்கெனவே அறிந்தவன் என்ற முறையில்தான் இப்பொழுது நான் உங்களைப் பார்த்துப் போக வந்திருக்கிறேன்!”

“சந்தோஷம், ஐயா!”

பெரியவர் தம் பெயர் ‘மாசிலாமணி’ என்றார். மாசிலாமணி அமர்ந்திருந்த பெஞ்சில் ஞானசீலனும் உட்கார்ந்தார். ‘எழுத்தாளனின் முகத்தைப் பிறர் நேருக்கு நேரே அறியாமற் போனாலும், அவனது அகத்தை அறிந்து கொண்டு விடுகிறார்கள் உலகத்தவர்கள். இந்த அளவில் எழுத்தாளன் என்ற கெளரவம் புகழ்ச்சிக்குரியதே யன்றோ!..இதை நிரூபிப்பதற்கு இப்போது வந்திருக்கக் கூடிய இந்த மூத்தோர் விஜயமே போதுமே!’