பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 45



'நலுங்கு' பாட, தோன்றாமல் தோன்றி-சிரிக்காமல் சிரித்த அந்தப் பொற்பதுமை வாணியைத் தொடுத்த விழி மடக்காமல் பார்த்தார்; பார்த்துக் கொண்டேயிருந்தார். 'ஆஹா! வாணிதான் அழகுக்கு ஆதரிசப் பொருளா?'

வாணியை மறுமுறை பார்த்துவிட வேண்டுமென்ற 'அரிப்பு' கிளர்ந்தெழுந்தது.

அன்னை வந்தாள்: கை விளக்குடன் வந்தாள். அவளிடம் ஞானசீலன் சொன்னார்: "அம்மா, எனக்கு வாணியை நிரம்பவும் பிடித்திருக்கிறது!"

கோசலை அம்மாளின் முகத்தில் ஆனந்தப் பெருக்கு ஆடிப் புனலாகப் பொங்கி வழியத் தலைப்பட்டது.

அன்றிரவு ஞானசீலன், 'போட்மெயிலில்' பட்டணத்திற்குப் பயணப்பட்டார். அன்றிரவு பூராவும் அவர் மனம் வாணியையே நினைத்து மகிழ்ந்தது. "நெஞ்சே! நீ வா!" என்று அவள் தவம் புரிந்த அதே திசை நோக்கித் தவம் இருந்தது!

8. ஞானசீலனின் பாதங்களில்
தவசீலி!

'தவம் என்றால், அதற்குக் கட்டுத் திட்டங்கள் அதிகம், கண் மூடி, வாய் பொத்தி, ஒன்றிய தனிமையில் ஒன்றினால் மாத்திரம் போதுமா, போதாது, போதாது!

கண் மூடியிருக்க, மனம் திறந்திருக்க வேண்டும்.

மனம் திறந்திருக்க, மனிதாபிமானம் உணர்ச்சி பூர்வமான பிடிப்புக் கொண்டு விழித்திருக்க வேண்டும்.