பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


தவசீலியின் உருவம் நிழலாடியது. உள்ளம் என்கிற கிழியில், “நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?” என்று வினாச்சரம் தொடுத்த அவளது துணிவும் நிழலாடியது.

அப்பால், வாணியை நினைத்தார், “நீ என்னைக் காதலிக்கிறாயா?” என்று அவள் முன்னே வைத்த கேள்வியின் துடுக்குத் தனத்தைப் பற்றிய சிந்தனை விரிந்தது.

அதற்கப்புறம், “தம்பி, நீ யாரையாவது காதலிக்கிறாயா?” என்று பாசத்துடன் கேட்ட பான்மையை எடை போட்டார்.

இறுதியில், “அம்மா, எனக்கு வாணியை நிரம்பவும் பிடித்திருக்கிறது!” என்று அவர் முத்தாய்ப்பிட்டு மொழிந்த முடிவையும் ஆரம்பக் கதையாக்கினார் அவர்.

பெரியவர் மாசிலாமணியின் ஏக புதல்வி கமலாட்சியைக் குறித்து, ‘குறி’ பார்க்க அவர் உள் மனம் நாடிய சமயம், எழும்பூர் வந்து நின்றது!

ஞானசீலன் தடுமாறிய தூக்கத்தைத் தடுமாற விட்டபடி, தமக்குரிய சாமான்களைக் கையில் எடுத்துக் கொண்டார். தொங்க விடப்பட்டிருந்த கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டார். அப்பொழுது அங்கு மிங்கும் நட்மாடிக் கொண்டிருந்த பாவையர் முகங்களில் எல்லாம் அவர் வாணியையே தரிசித்தார். கொண்டைப் பூச்சரமும், மங்களத் திலகமும், எழிலாடிய வளைகளும் விளங்க, வாணி தோன்றாமல் தோன்றினாள்!.

அதே கணத்தில், “ஐயா! ஸார்!” என்று தடுமாறி ஓடி வந்து ஞானசீலனின் கால்களில் விழுந்தாள் தவசீலி!