பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 69


மகிழ்சிக்குக் ‘கூடி’ நின்று வேடிக்கை காட்ட, இப்படியான மனப் பின்னல் கேளிக்கையினூடே நிமிஷங்களையும் வினாடிகளையும் கூட்டுப் புள்ளி விடாமல் உண்ட மயக்கத்தில் சுவர்க் கடிகாரம் ‘ஹாயாக’க் கடமை இயற்ற, அந்தக் கடமையின் பிரதிபலிப்பாக, அதோ, பையன் வந்துவிட்டான்!

‘இன்றைக்குக் கட்டாயம் வாணி என் வாணி பதில் எழுதியிருப்பாள்!” என்னும் திடசித்தத்தோடு, இறைந்து கிடந்த தபால்களில் கண் ஓட்டம் பதித்தபோது, ‘தனிப் பார்வைக்கு-அவசரம்’ என்ற சிவப்பு மைக் கோட்டுடன் அவரது ஆவலுக்குப் பச்சைக் கொடி வீசியவாறு காட்சியளித்த அந்தக் கவரைப் பிரித்த போது, சிரிக்கின்ற வரம் வேண்டி வாணிக்குத் தூது அனுப்பி, அந்தத் தூதுடன் தன்னுடைய தீர்க்கமான சங்கற்பத்தையும் தூது விடுத்திருந்த மனவோர்மையின் பவித்திரத் தன்மையின் பாந்தவ்யத்தையும் அவர் விழித்தளத்தின் அடிவாரத்தில் தேக்கி வைத்துத் தரிசித்து மனத் தெம்பு பெறவும் தவறினாரில்லை!

நாற்பது பக்க நோட்டுத் தாளில் எழுதப்பட்டிருந்தது கடிதம்.

அதைக் கைப்பற்றியபோது, வாணியையே கைப்பற்றியதாக ஒரு திளைப்பு ஊறியது. தெய்வத்தை எண்ணமிட்டார். “ஆண்டவனே! நீ சகலமும் புரிந்தவன், ஆனால் இந்த மனிதர்கள்தாம் ஒன்றும் புரியாமல் குழம்பித் தவிக்கிறார்கள்!” என்னும் கீதாஞ்சலியின் வாசகம் அவரையும் அறியாமல் நெஞ்சில் முட்டிமோதி எதிரொலி கிளப்பிற்று.