பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்

“...பேரன்புக்குடைய தங்களை எப்படி விளிப்பது என்கிற ரகசியம் புரியாது விழிக்கிறேன். தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது. உங்களது தபால் வந்தது. என் பாக்கியமே பாக்கியம்! சித்திரை வைகாசியில் கலியாணம் முடித்து விடலாமென்பது தங்களது அம்மாவின் ஆசை. என் அப்பாவுக்கு அதுவே இஷ்டம். உடன் புறப்பட்டு வந்தால் தேவலாம்.

மாரி அம்மன் துணை,
வாணி”

ஞானசீலனுக்கு உண்டான குதூகலம் அவ்வளவு, இவ்வளவல்ல மனக் கனவுகளின் புள்ளிக் கோல விளையாட்டு தொடர்ந்தது. உதட்டுக் கங்கில் உற்பத்தியான நகைத் துளிகளிலே தேன்சுவை மிதந்தது.

அன்றையத் தபால்களைப் பார்வையிட்டார். ‘நாவல் - சிறுகதை தேக்கம்பற்றி ‘ஒருதலைப்பட்ச விமர்சனம்’ செய்திருந்த எழுத்தாளரைப்பற்றி முன் இதழில் ‘காரசாரமாக’த் தாக்கி உபதலையங்கம் தீட்டியிருந்ததைப் பாராட்டி மானாமதுரை அன்பர் எழுதிய கடிதத்தையும் சேர்த்து வந்து சேர்ந்த போற்றுதல் கடிதங்கள் நூற்று ஏழு. அவரது நெஞ்சம் – இலக்கிய நெஞ்சம் விம்மிப் பெருத்தது. தோள்கள் விம்மிப் பெருத்தன. பேனா பற்றும் எழுத்தாளனே உண்மையான முதல் வீரன்! அவனது முதற் பணிதான் பிறந்த பொன்னாட்டினுக்கு முதற் தேவை!’ என்ற தம் கருத்தை மறுபடியும் ஸ்திரப்படுத்தினார்.

பார்வையாளர்கள் வந்திருப்பதாகத் தகவல் வந்தது.

பார்க்க வந்தவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

வாடிக்கையான உபசரிப்புக்குப் பிறகு,