பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


தொலைத்து விட்டார்களா? ஊம். வரட்டும்! என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார். “பாவம்!..மாரீசன்” பேனாவை எடுத்து மண்டை உச்சியில் குத்திக் கொண்டார்.

பெட்டியைவிட்டு இறங்கினார். இறங்கும் பொழுது ஏதோ ஒரு பாக்கெட் எடிஷன் தட்டுப்பட்டது. எடுத்துக் கொண்டு இறங்கினார்.

சரித்திரப் பெருமை உடலெடுத்த தஞ்சையம்பதியின் அழகும் அந்தமும் ஜங்ஷனிலேயே காணக்கிடைத்தன. முந்திரிப் பருப்பு, குடமிளகாய், வெட்டி வேர் கதம்பம் எல்லாம் மணம்பரப்பி மகிழ்ந்தன. விடிபொழுதின் இனம் புரியாக் குதுரகலத்துடன் ஞானசீலன் உலாவிக் கொண்டிருந்தார். கதம்பம் நாலு முழம் வாங்கிக் கொண்டார். அவருக்குள்ளாகவே நமட்டுச் சிரிப்பு நெருடிக் கொண்டு வெளிப்பட்டது.

ஐ.ஆர்.ஆர். காப்பியிலும் சிகரெட்டிலும் அவர் புது ஜன்மம் எடுத்தார். தஞ்சையில் தங்க வேண்டிய நாட்களிலே தாம் செய்தாக வேண்டிய காரியங்களை நினைத்துக் கொண்டார். முதலாவதாக, தாம் எழுத வேண்டிய “தண்ணிர்த் திருவிழா” என்ற வளர்கதைக்குச் சுருக்கம் தயாரிக்க வேண்டும். பர்மியர்களின் வாழ்வின் நிலையைக் களமாகக் கொண்டது அக்கதை. அடுத்தது, மங்கம்மா கதை. அதற்குச் சில சந்தேகங்கள் தெளிவு பெற வேண்டும். ‘மதுரை நாய்க்கர்களின் வரலாறு’ என்னும் சத்யநாதய்யரின் நூலை சரஸ்வதி மகாலில் புரட்ட வேண்டும். அப்புறம், திரையுலக நண்பர் ஒருவருக்காக ‘ட்ரீட்மெண்ட்’ ஒன்று தயாரிக்க வேண்டும். அது முடிந்தால், நிலவுப் பதிப்பகத்தார் வெளியிடவிருக்கும்