பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 77


முதல் முக்குழிப்பு முக்குளித்து எழுந்தார் ஞானசீலன். உதய சூரியன் ஒளிக் கற்றைகள் அவருக்கு இதம் தந்த விதத்தை அனுபவித்தவராகத் தலையை உயர்த்தி நீர்மட்டத்தை விட்டு எழுந்தபோது அவர் கண்ட காட்சி அவருக்கு மலைப்பைக் கொடுத்தது. அவர் தம்முடைய தலையைத் தாழ்த்திக் கொண்டார். ஆனாலும், அவரையும் மீறிய வகையில் அவர் கண்கள் எதிர்த்துறைக்கு நாடி ஓடின.

அழகு அங்கு அவதாரம் எடுத்துக் கொண்டிருந்தது.

அழகின் ஆதரிசமா அது?

ஆஹா!...

தம்மைப் பார்த்துவிட்ட வாணி குறுவிழி குறுக்கி, இதழ் நகை விரித்து, இளநெஞ்சம் விம்மி, எட்டி நின்ற படியே ஒட்டி வந்து, பேசாமல் பேசிவிட்டாளே பேரழகி வாணி?...

ஞானசீலன் முதல் முறையாக நாணம் ஏந்தினார். குளிர்போன இடம் தெரியவில்லை. ஆனால் குமரி வாணி போன இடமும் அவரது குதூகலம் புறப்பட்ட இடமும் அவருக்கு அத்துப்படி.

புத்துணர்ச்சி பெற்றுப் பலகாரம் சாப்பிட்டு முடித்து, ஞானசீலனின் ஓரக்கண் பார்வைக்கு ஒயிலான இலக்குப் புள்ளியானாள் வாணி. தளர முடிந்த கூந்தல் அவர் பார்வையில் தட்டுப்பட்டது. வழக்கம்போல, அதே நிலைப்படி மறைவில்தான் இப்பொழுதும் அவள் நின்று கொண்டிருந்தாள்.

“வாணி, வா..!” என்று கூப்பிட்டார் அவர்.

பொய்க் கோபம் தாங்கி உண்மை நாணம் ஏந்தி நடந்து வந்தாள், ஏந்திழையாள்.