பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

83


கொல்லாமையாகிய அறம் இறைவழிபாட்டுக்குரிய எண்வகை மலர்களுள் சிறப்புடையதென்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) பிறவிப் பெருங்கடலைக் கடத்தற்குப் பற்றுக் கோடாயுள்ள நல்ல சிவகுருவினை வழிபடுதற்குரிய பலவாகிய மலர்களுள்ளும் பிறவுயிர்களைக் கொல்லாமையாகிய அறமே ஒளியுடைய நன்மலர் மாலையாம். உள்ளமாகிய தகளியின் ஞானச்சுடரே அசைவற்ற திருவிளக்காகும். பொருந்தி நுகரும் நிவேதனம் உயிரேயாகும். பூசை கொண்டருளும் இறைவன் அமர்ந்தருளிய இடம் தலையின் உச்சியாகிய பிரமரந்திரமாகும்.

“தந்தை தாயாவானும் ........கோனாகுவானும் குரு” என்பதுணர்த்துவார் ‘பற்றாய நற்குரு’ என்றார். பன்மலர் என்றது, அகப்பூசைக்குரிய நறுமலர்களாகிய அன்பு, கொல்லாமை, பொறியடக்கம், வாய்மை, பொறை, அருள், அறிவு, தவம் என்னும் எண்வகை மலர்களை.

‘உரைசெய் நூல்வழி யொண்மலர் எட்டிடத்
திரைகள் போல்வரு தீவினை தீர்ப்பரால்’ (5-54-7)

என்பது அப்பர் அருள்மொழி. அணுக்கள்-உயிர்கள். நற்றார்-நல்தார்-நல்லமாலை. நடுக்கற்ற சித்தம் தீபம், உற்று ஆரும் (உணவு) ஆவி, அமர்ந்த இடம் உச்சி ஆம் என இயையும். நடுக்கற்ற சித்தம்-துளங்காத சிந்தை. அதுவே பூசைக்குரிய தீபமாம் என்க. “உள்ளமே தகளியாக ...... இருந்து நோக்கில், கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே”, எனவும், ‘பூசனை யீசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே’ எனவும் வரும் அப்பரருள் மொழிகள் இங்கு ஒப்புநோக்கி யுணரத் தக்கனவாகும். ஆவி-உயிர். ஆன்மாவே நிவேதனப் பொருள் என்பதாம்.