பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமந்திர நூலமைப்பு

திருமூலநாயனர் அருளிய திருமந்திரம் தமிழ் ஆகமமாகத் திகழ்கின்றது. சிவாகமங்கள் தந்திரம் மந்திரம் உபதேசம் என்னும் மூவகை உரைகளையும் அங்கமாகக் கொண்டன. அவற்றுள் தந்திரகலை என்பது, வேத ஆகமங்களின் வகைகளாகிய கருமகாண்டம் ஞானகாண்டம் உபாசனா காண்டம் என்னும் மூன்றனுள் கரும காண்டம் பற்றி முன்னொடு பின் முரண்பாடின்றி மேற்கொள்ளும் செயல் முறைகளை அறிவுறுத்துவது. மந்திரகலை என்பது உபாசனா காண்டம் பற்றி மனமுதலியன அடக்கித் தெய்வத்தைத் தியானித்து வழிபடும் முறையினை விரித்துரைப்பது உபதேசகலை என்பது ஞானகாண்டம் பற்றித் தனக்குத் தோற்றமும் ஈறுமில்லாத இறைவனுடைய தன்மைகளைத் தான் உணருமாறும் பிறர்க்கு உணர்த்துமாறும் அறிவுறுத்துவது.

மேற்குறித்த மூவகை உரைத்திறங்களும் ஒருங்கமைந்த செந்தமிழ்ச் சிவாகமமாக விளங்குவது திருமூலர் திருமந்திரமாகும். தந்திரம் மந்திரம் உபதேசம் என்னும் மூன்றனுள் நடுவே நின்ற மந்திரம் என்பது முன்னுள்ள தந்திரப் பகுதியோடும் பின்னுள்ள உபதேசப் பகுதியோடும் நெருங்கிய தொடர்புடையதாம் தலைமைபற்றித் திருமூலர் இறைவனருளாற் சிந்தை செய்து அருளிய இத்தமிழாகமத்தை ‘மந்திரமாலை’ எனக் குறித்துள்ளார். இந்நூலிலுள்ள திருப்பாடல்கள் ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பெற்றுள்ளன. திருமூலர் தாம் அருளிய தமிழாகமப் பொருள் தமக்குக் கிடைத்த வழியினே எடுத்துரைக்கும் நிலையில் அருளிய பாடல்கள் திருமந்திர நூலின் தொடக்கத்திற் பாயிரம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன.