பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

திருமந்திரம்


விநாயகப் பெருமானுக்குத் திருக்கரங்கள் ஐந்தாகலின் ஐந்துகரத்தன் என்றர். கரம் - கை. ஐந்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், கலசம், ஒடித்த கொம்பு, மோதகம் என்னும் ஐந்தினையும் கொண்டுள்ளார் விநாயகர். இவை ஐந்தும் ஆன்மாக்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்னும் ஐந்து மலங்களையும் களையும் தொழிலினைக் குறிப்பன என்றும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலைச் செய்யும் ஐந்தெழுத்தினுருவாகிய இறைவர் விநாயகர் என்பதனைக் குறிப்பன என்றும் கூறுவர். யானை முகம், ஒங்காரமே திருவுருவாகத் தோன்றியவர் விநாயகர் என்பதனைக் குறிப்பதாகும். சிவஞானச் சுடராய்த் தளிர்த்துத் தோன்றும் பேருணர்வாகிய ஞானமே திருமேனியாகவுடையார் விநாயகப் பெருமான் என்பார், ஞானக்கொழுந்து என்றார். புந்தி - புத்தி; உயிரின் அறிவு. அடி என்றது, இறைவனது ஞானசத்தி கிரியாசத்தி என்னும் திருவருளின் உருவாகிய திருவடிகளை. அடியினைப் புந்தியுள் வைத்துப் போற்றுதலாவது, இறைவனுடைய ஞானசத்தி கிரியாசத்தியாகிய திருவருளைத் தம்முடைய அறிவாற்றல் செயலாற்றல்களுக்கு முதலாகக்கொண்டு அதன்வழி அடங்கி நடத்தல்.

கடவுள் வாழ்த்து

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே.

இத்திருமந்திரம் கடவுளின் இயல்பினை உணர்த்துகின்றது.