பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

திருமந்திரம்


கடவுளுமாகிய இருவர் அம்முதல்வனைத் தேடிக்காணப் புகுந்த) அன்று (நான்முகன் அன்னமாய் விண்ணிற் பறந்து சென்று காணவொண்ணாத) செம்மையான சடை முடியையும் (திருமால் கேழலாய் நிலத்தினை அகழ்ந்து தேடிக் காணவொண்ணாத) செந்தாமரை மலர் போலுந் திருவடியையும் உடையான் (அம்முதல்வன்) எ-று.

அருளே திருமேனியாகக் கொண்டு எவ்வுயிர்க்கும் அருள்சுரக்கும் செம்பொருளாகிய சிவபெருமானை உலகினைப் படைத்துக் காத்து அழித்தலாகிய முத்தொழிலைச் செய்யும் அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகளுள் ஒருவனாகக் கொண்டுரைத்தல் பொருந்தாதென்றும், தன்னையொப்பாவார் ஒருவருமில்லாத தனி முதல்வன் அவன் என்றும் அறிவுறுத்த எண்ணிய திருமூல நாயனார், மூவர் கோனாய் நின்ற அம்முதல்வனது இறைமைத் தன்மையை விளக்கும் புராணச் செய்திகளுள் திருமால் பிரமர் அடிமுடி தேடி யறியவொண்ணாதவாறு ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ் சோதியாய் நின்ற செயலைக் குறிப்பால் உணர்த்தும் முறையில்

“அன்று புவனங்கடந்து பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரையானே”

என்றார். அன்று என்றது, மாலும் அயனும் தாம்தாம் பிரமம் என முரண்பட்டு நின்ற அக்காலத்தினை. புவனங் கடந்து பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடி எனச் சடைமுடியின் சிறப்பினை விரித்துரைக்கவே, அம்முதல்வனது திருவடியாகிய தாமரை ‘பாதாளம் ஏழினுங்கீழ்ச் சொற்கழிவு பாதமலர்' என்றவாறு பாதாளம் ஏழினையுங் கடந்து அப்பாற்சென்ற சிறப்பினது எனத் திருவடியின் பெருமையினையும் உய்த்துணர வைத்தாராயிற்று. தவனம் - வெப்பம்; வெம்மையுடைய தீயின் செந்நிறத்தைச் சுட்டி நின்றது. தாமரை என்பது மலர்போலுந் திருவடியினைக் குறித்தது.