பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள் முறைத் திரட்டு

23


அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை என்பதோடு சிவனொடொக்குந் தெய்வம் எங்குந் தேடினும் இல்லை என்பதனை, அங்ஙனம் எங்குந்தேடி உண்மை யுணர்ந்தாராகிய திருமால் பிரமரது செயலில் வைத்து ஆசிரியர் குறிப்பாக விளக்கிய திறம் உணர்ந்து மகிழத் தக்கதாகும்.

இத்திருமந்திரப் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

‘தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத்தேவர்
மூவராய் நின்றதோரார் முதலுருப் பாதிமாதர்
ஆவது முணரார் ஆதியரி யயற்கரிய வொண்ணா
மேவுரு நிலையும் ஓரார் அவனுரு விளைவும் ஒரார்’
                                                 (சுபக் - 69)

என வரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.


4. அவனை யொழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. (6)

இது, எல்லாவுயிர்களுக்கும் இறைவனது உதவி இன்றியமையாதது என்பதனை உணர்த்துகின்றது.

(இ - ள்) சிவபெருமானாகிய அவனது சார்பினைப் பெறாதொழியின் தேவர்களும் (தத்தம் போகங்களை நுகர்ந்து இன்புறுதல்) இல்லை. அம்முதல்வனது திருவருளாகிய துணையின்றிச் செய்யப்பெறும் அரிய தவம் எதுவும் (இனிது நிறைவேறுதல்) இல்லை. அம்முதல்வனையன்றி அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகளால் ஆகக் கூடியது எதுவும் இல்லை. அம்முதல்வனது திருவருளின்