பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

திருமந்திரம்


‘தமிழின் நீர்மைபேசித் தாளம் வீணைபண்ணி நல்ல
முழவ மொந்தை மல்குபாடல் செய்கையிடம் ஓவார்’
                                                   (1–73-8)

எனவரும் திருமுறைத் தொடர்களால் இனிது புலனாம்.

சிந்தனைக்கு எட்டாத சிவபரம் பொருள், தன்னை அன்பினால் நினைந்து போற்றும் அடியார்களின் கண்ணகத்தே தோன்றி அருள்புரிதலை அனுபவத்தில் உணர்ந்து மகிழ்ந்த யான் அங்ஙனம் எளிவந்தருள்புரிந்த இறைவன்பால் ஆராத காதலுடையேன் ஆயினேன் என உலகத்தார்க்கு அறிவுறுத்துவார் ‘கண்ணகத்தே நின்று காதல் செய்தேனே’ என்றார். நின்று-நிற்றலால். காதல் செய்தல்-இறைவன்பால் அன்பு மீதூரப் பெறுதல். ‘கண்ணகத்தே நின்று களிதரு தேனே’ (திருப்பள்ளியெழுச்சி - 9) எனப் போற்றுவர் திருவாதவூரடிகள். இத் திருமந்திரத்தை யடியொற்றியமைந்தது,

‘விண்ணகத்தான் மிக்க வேதத்துளான் விரிநீருடுத்த
மண்ணகத்தான் திருமாலகத்தான் மருவற் கினிய
பண்ணகத்தான் பத்தர் சித்தத்துளான் பழநாயடியேன்
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான்எம் கறைக்கண்டனே’ (4-112-6)

எனவரும் திருவிருத்தமாகும்.


10. அப்பனை நந்தியை ஆரா வமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
(36)

இறைவனது அருளைப் பெறுதற்கு உபாயம் கூறுகின்றது.