பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

திருமந்திரம்


16. நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. (67)

திருமூலர், தம் குருநாதர்பால் உபதேசம் பெற்ற மாணவர்கள் தம்முடன் சேர்த்து எண்மர் என்பதனை இப் பாடலில் எடுத்துரைக்கின்றார்.

(இ-ள்) நந்தியாகிய சிவகுருவின்பால் உபதேசம் பெற்ற நாதர் என்னும் சிறப்புக்குரிய மாணாக்கர்களைத் தெரிந்து கூறுமிடத்து, சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என நந்திகள் நால்வராவர். சிவயோகமா முனிவரும், தில்லைப் பொன் மன்றிலே (திருக்கூத்தினக் கண்டு) தொழுத பதஞ்சலி முனிவரும் (புலிக்கால் முனிவராகிய) வியாக்கிரபாதரும் என்று சொல்லப்பட்ட இவர்களுடன் என்னையுஞ் சேர்த்து எண்ண எண்மர் எனவும் சொல்லுதல் பொருந்தும் எ-று.

திருமூலநாயனர் இத்திருப்பாடலில் நந்தியருள் பெற்ற மாணவருள் சிவயோக மாமுனி, தில்லையில் திருநடங் கண்டு தொழுத பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாதர் என்னும் மூவருடன் தம்மையுஞ் சேர்த்து எண்ணுதலால் இவர்கள் நால்வரும் ஒரு காலத்தவர் என்பது நன்கு விளங்கும். தில்லையில் பதஞ்சலிமுனிவரது வேண்டுகோளை நிறைவேற்றுதற் பொருட்டே சிவபெருமான் கூத்தப்பெருமானாகத் திருமேனிகொண்டு தோன்றி என்றும் நிலவும் திருக்கூத்தினை யாடியருள்கின்றார் என்பார் ‘மன்று தொழுத பதஞ்சலி’ எனச் சிறப்பித்தார். ‘பதஞ்சலிக்கு அருளிய பரமநாடக’ எனப் போற்றுவர் திருவாதவூரடிகள்.