பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

49

.

பூம்படிமக்கலம் பொற்படிமக்கலம் என்றிவற்றால்
ஆம்படிமக்கல மாயினும் ஆரூரகத்தமர்ந்தார்
தாம்படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ்மாலைகளால்
நாம்படிமக்கலஞ் செய்துதொழுதுய் மடநெஞ்சே? (4-103-3)


என வரும் திருவிருத்தத்தால் திருநாவுக்கரசர் புலப்படுத்தியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.


21. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. (86)

பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவனை உலகத்தார் அன்பு உறுதியுடன் கூடிப் போற்றுதற்குரிய சாதனமாக அமைந்தது திருமந்திர மாலையாகிய இத் திருமுறை என இதனால் நூற்பயன் உணர்த்துகின்றார் திருமூலர்.

(இ-ள்) பிறத்தல் இல்லாதவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகிய சிவபெருமானை வானுலகத்தவராகிய தேவர்கள் அன்புரிமைச் சிறப்புடன் சென்று கைகூப்பி வணங்கி எக்காலும் மறத்தல் இல்லாதவராய் நினைத்தற்கும் உறுதியுடன் கூடி நின்று ஒதிப் போற்றுதற்கும் மந்திரமாலை யாகிய இத்திருமுறை ஏற்புடையதாகும். எ-று.

வானவர், பிறப்பிலிநாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு சென்று கைகூப்பி நெஞ்சினுள் மந்திரமாலையினை மறப்பிலராய் நின்று ஓதலும் ஆம் என இயையும். பிறப்பு இலி-பிறத்தல் இல்லாதவன்; ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ எனப் போற்றுவர் இளங்கோவடிகள், ‘பிறப்பில் பெருமானைப் பின் தாழ் சடையானை, மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே’ என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல்.