பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

திருமந்திரம்


காரிய யாக்கையும் இறைவனது அருட்பெருந்தீயினாற் சுடப்படின் அழியாத திண்மையைப் பெறுதலும் அவ்வாறு சுடப்படாத நிலையில் உலகப்பற்றாகிய மழைத்துளிபட உருச்சிதைந்து அழிதலும் ஆகிய இருவகை நிலையினைப் பெறுவதாகும்). இக்கருத்துடன் திருவருளைச் சிந்தித்து நிலையுடைய வாழ்வினைப் பெறுதலின்றி இவ்வுலக மாந்தரிற் பெரும்பாலோர் வறிதே இறந்தொழிகின்றார்கள் எ-று.

உலகில் வாழும் எவ்வகைப்பட்ட உயிர்களின் உடம்புகட்கும் முதற்காரணமாயமைந்தது மாயையென்னும் மண் ஒன்றே என்பார், ‘மண் ஒன்று கண்டீர்’ என்றார். மன்னுயிர்களின் யாக்கையனைத்திற்கும் மாயை ஒன்றே காரணமாயினும் அதன் விளைவாகிய யாக்கை இறைவனருளாகிய தீயாற் சுடப்படின் எளிதிற் சிதையாத திண்மையுடையதாதலும் அதன் சார்பின்றிப் புலனுணர்வாகிய மழைத்துளிபடின் எளிதிற் உருச்சிதையும் தன்மையதாதலும் என இருவகை நிலையினதென்பார், ‘மண் ஒன்றாயினும் இருவகைப் பாத்திரம்’ என்றார். அவற்றுள் தீயின் தொழிலாகிய சுடுதலைப் பெற்ற மண்கலம் புனல்படச் சிதையாத திண்மையைப் பெற்றது என்பார், ‘தீயினைச் சேர்ந்தது திண்ணென்றிருந்தது’ என்றார். திண்ணெனல் - புனலாற் கரைந்து சிதையாத திண்ணியதாதல், தீயினாற் சுடப்படாத ஏனைப் பசுமட்கலம் மழைத்துளி பட்டாற் கரைந்து சிதைதல் போலத் திருவருளாகிய தீயினாற் பக்குவப்படாத அருளிலார் யாக்கை சிதைந்தொழியும் என்பார் ‘விண்ணின்று நீர்வீழின் மீண்டும் மண்ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்றவாறே’ என்றார் . தீயினைச் சேர்ந்தது - நெருப்பினாற் சுடப்பட்டது. தீயினைச் சேர்ந்தது திண்ணென்றிருந்தது. எனவே இறந்தொழிவது தீயினைச் சேராதது என்பது பெறப்படும். யாக்கையின் நிலையாமையுணர்த்துவார் அதனை நிலையுடையதாக்குதற்குரிய சாதனமும் உடன் கூறியவாறு.