பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

79


-தனை மாந்தரிற் பலர் அறியும் ஆற்றலின்றியுள்ளார்கள். இல்வுலகைக் கடந்து அண்டங்களையும் ஊடறுத்து என்றுமுளனாய் நிற்கின்ற இறைவனடியினைப் புகலாகப் பற்றிக் கிடக்கும் யானோ (அவர் வழியிற் செல்லாது) மேன்மேலும் அவ்வடித்துணையையே புகலாகப் பற்றிக் கிடந்து அன்பு செய்வேனாயினேன் எ-று.

நின்ற காலம் - இன்னின்னார்க்கு இவ்வளவு என ஊழால் வரையறுக்கப்பட்டு நின்ற வாழ்நாள். பாலன்-தொடக்கநிலைப் பருவம். இளையன் - இடைநிலைப் பருவம். விருத்தன்-கடைநிலைப்பருவம். ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் என்றது, கால எல்லைக்குட்பட்டு இயங்கும் உலகங்களைக் கடந்து அண்டத்துக்கு அப்பாலாய் நின்ற காலகாலனாகிய கடவுளை. அவனடித் துணையைப் பற்றியவர்கள் அதன் துணைகொண்டு ஞால எல்லையையும் கால எல்லையையும் ஒருங்கே கடக்க வல்லவராதலின் அவர்வழி நின்று அவ்விறைவன் திருவடிகளையே சரணெனப் பற்றிக்கிடந்து விரும்பி அன்பு செய்வேனாயினேன் என்பார் ‘ஞாலங் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி மேலும் கிடந்து விரும்புவன் நானே’ என்றார். கிடத்தல் - ஆன்ம போதங்கெடத் தன் செயலறுதல். இதனால் நிலையாமையைக் கடத்தற்கு உபாயங் கூறியவாறுணர்க.


உயிர் நிலையாமை


41. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே. (187)

ஓர் உடம்பிலேயே உயிர் என்றும் நீங்காது நிலைத்திருத்தல் இல்லை என்பதனை உணர்த்துகின்றது.