பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

81


என்பது புறநானூறு. அழைக்கின்றபோது - இயமன் வந்து அழைக்கும்போது.


42. ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. (188)

உடம்பிற் பொறிகள் செயலற்றொழிய உயிரானது உடம்பை விட்டுப் பிரியும் என்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலத்தார்க்கும் பொதுவுடைமையாக உடம்பாகிய ஒரு வயல் விளைந்து கிடந்தது. தமக்குரிய அவ்வயலை அவர் ஐவரும் தத்தமக்கே யுரியதாகக் கொண்டு காத்து வருகின்றார்கள். அவ்வைந்து பேர்க்கும் தலைவனாகிய உயிர்க்கு இயமனிடமிருந்து ஓலைவந்து உயிர் (அதனை விட்டுப் பிரிந்து) சென்றமையால் அவர் ஐவரும் அவ் வயலைக் காக்குந் தொழிலைச் செய்யமாட்டாது கைவிட்டார்கள் எ - று.

ஐவர் என்றது ஐம்பொறிகளை. ஒரு செய் என்றது அவ்வைந்தின் உழப்பிற்கும் பொது நிலமாகிய உடம்பினை. ஐவர்க்கு நாயகன் என்றது அப் பொறிகளைந்தையும் தத்தம் புலங்களிற் செலுத்தித் தொழில் கொள்ளவல்ல உயிரை. நாயகனுக்கு என ‘கு’ உருபு விரித்துரைக்க. ஓலை என்பது, குறித்த காலம் முடிந்தமையால் உடம்பின விட்டு நீங்குக என விதிக்கும் முறையில் அமைந்த சாக்காட்டினை. காவல் விடுதல் என்றது தம்மைச் செலுத்திப் பணிகொள்ளும் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தமையால் பொறிகள் செயலற்றழிதலை.