பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 73அள்ளி வாயிலே திணிக்கப் பார்த்தது. அப்போது, சற்றுத் தூரத்திலிருந்து குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கடைக்காரர் பார்த்துவிட்டார். சும்மா இருப்பாரா? ‘பிடி! பிடி!’ என்று கத்திக் கொண்டே கடையை நோக்கிப்பாய்ந்தோடி வந்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! பொரியைக் கீழே எறிந்துவிட்டு ரங்கன் தலைதெறிக்க ஓடியது. கடைக்காரர். அப்போதும் சும்மா இருக்க வில்லை. தெருவிலே கிடந்த ஒரு கல்லை எடுத்துக் ரங்கனைக் குறிபார்த்து எறிந்தார். கல், ரங்கன் முதுகிலே பட்டதும், வலி தாங்காமல் ‘கீ, கீ’ என்று கதறிக்கொண்டே ஓடிவிட்டது.

அன்று முழுவதும் ரங்கன் வெளியில் தலை காட்டவே இல்லை. சிறிது தூரத்தில் இருந்த மரத்தில் ஏறி, இரண்டு கிளைகளுக்கு நடுவே உட்கார்ந்து முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாவம், அன்று முழுவதும் பட்டினி!

மறுநாள் காலையிலே மரத்துக்கு மரம் தாவி, சுவர்கள் மீது ஏறி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே வந்தது. ஒரு கிழவி, ஒருமரப்பலகையில் தேங்காய்க் கீற்றுகளை அழகாக அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டது.