பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என் கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்

என வரும் திருக்குறளாகும்.

இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் பண்டைத்தமிழ் மக்கள் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி இரங்கும் உயிரிரக்க உணர்வுடையராய் ஒழுகினமை நன்கு புலனாகும். இவ்வாறு தமிழ் முன்னோர் கொண்டொழுகிய உயிரிக்க ஒழுகலாருகிய சீவ காருணிய ஒழுக்கத்தை மீண்டும் வற்புறுத்தி எல்லாமக்களும் மேற்கொள்ளச் செய்த பெருமை வடலூர் அருட்பிரகாச வள்ளலாருக்குரிய தனிச் சிறப்பாகும்.

இனி, இவ்வொழுகலாறு பற்றி வள்ளலார் தரும் விளக்கங்களை இங்குத் தொகுத்து நோக்குதல்இன்றியமையாதது.

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்ட வர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.

எல்லா அண்டங்களையும் எல்லாப் புவனங்களையும் எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும் எல்லாப் பயன்களையும் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபமாகும்.