பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x


அன்னோர் தயங்குகின்றார்கள். மேற்குறித்த இருதிறத்தாரும் சைவத் திருமுறைகளையும் அவற்றில் தோய்ந்த இறைவன் திருவருளில் இராமலிங்க வள்ளலார் அருளிய திருவருட்பாவினையும், காய்தலுவத்தலகற்றி ஒப்புநோக்கி ஆராய்வார்களானால், சைவத்திருமுறைகள் மூலநூலாகவும், திருவருட்பா அவற்றின் பெருவிளக்கவுரையாகவும் அமைந்துள்ள ஒற்றுமைத்திறத்தினை உள்ளவாறுணர்வர். அதனால் திருமுறைகளும் திருவருட்பாவும் தம்முட் பொருளால் முரண்படுவன அல்ல என்னும் தெளிவுடையராவர் என்பது திண்ணம். இவ்வாறு சைவத்திருமுறைகட்கும் திருவருட்பாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினையும், அவ்விரண்டுக்கும் பொருள் மாறுபாடு சிறிதும் இல்லை என்பதனையும் எடுத்துக் காட்டி விளக்குவதே இச்சிறுநூலின் நோக்கமாகும்.

சாதிமதவேற்றுமையொப்பு, வேதாந்த சித்தாந்த சமரசம் இராமலிங்க வள்ளலார் வற்புறுத்திய சாகாக்கல்வி, மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய கருத்துக்கள் பல திருமூலர் முதலிய திருமுறையாசிரியர்கள், காழிச் சிவஞான வள்ளலார், தாயுமானார் ஆகியபெருமக்கள் இயற்றிய நூல்களிலும், இடைக்காலத்து சித்தர் பாடல்களிலும், பிற்காலத்தில் வாழ்ந்த அனுபவ ஞானியாகிய குமாரதேவர் நூல்களிலும் கூறப்பட்ட பழைமையுடையனவேயன்றி வள்ளலாரால் எவையும் புதியனவாகப் புனைந்து கூறப்பட்டன அல்ல. இடை காலத்தில் வாழ்ந்த சிவஞானச் செல்வர்கள் கண்டுணர்த்திய அக்கருத்துகளை விளக்கி உலகமக்கள் பலரும் தம் வாழ்வியல் நடைமுறையில் பின்பற்றியொழுக நெறிப்படுத்தி உறுதியாக விரிவாக வழங்கிய தொன்றே வள்ளலார்க்குரிய தனித் தன்மையாகும். வள்ளலார்