பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii


இதனை அன்புகூர்ந்து உடனிருந்து எழுதி நிறைவேற்றிய அவர்கட்கு எனது நன்றியும், வணக்கமும் வாழ்த்தும் ,பாராட்டும் என்றும் உரியவாகும்.

இந்நூல் மணிவாசகர் நூலகத்தின் வெளியீடாக வெளிவருதற்குரிய ஊக்கவுரையினை நல்கியதுடன் அருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பாவின் செம்பொருள் நுட்பங்கள் இனிதுபுலனாக ஆய்வுநலம் சிறந்த அணிந்துரையினை ஆர்வமுடன் எழுதி இந்நூலினைச் சிறப்பித்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மூதறிஞர்செம்மல் டாக்டர் வ. சுப. மாணிக்கம் பி.எச்.டி., டி.லிட்., அவர்களுக்கு எனது உளமார்ந்த வணக்கத்தினையும் நன்றியினையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தம் தந்தையார் விரும்பிய வண்ணம் இதனை வனப்புற வெளியிட்டு உதவியவர், சிறந்த நூல்களை வெளியிடுந் திறத்தால் செந்தமிழ் வளர்க்கும் மணிவாசகர் நூலக உறுதுணையாளரும் அண்ணாமலைப் பல்கலைச் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும் ஆகிய நண்ப திரு ச. மெய்யப்பன் எம்.ஏ. அவர்கள் ஆவர். இவர் நாள்தோறும் கூத்தப் பெருமானை வழிபட்டு வரும் பெற்றியர். தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடைய இவர் தில்லைச்சிற்றம்பலவன் திருவருளால் எல்லாச் செல்வங்களும் பெற்று நல்ல தமிழ்ப் பணிகள் புரிந்து, நாடு நலம்பெற நீடு வாழ்க என உளமுவந்து வாழ்த்துகின்றேன்.

சில் வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவேன் உய்திபெற
நல்ல தமிழ்ப் பணியை நல்குவான்-செல்வமலி
புள்ளிருக்கு வேளுர்ப் புகழ்ச்செவ்வேள் பொன்னடியென்
உள்ளிருக்க என்றும் உவந்து.

கனகசபை நகர் க. வெள்ளைவாரணன்

.. - 11-86