பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


தமிழகத்தைப் பொறுத்த வரையில் இடைக்காலத்தில் வந்ததென்றே எண்ண வேண்டியுள்ளது.

பண்டைய நாளில் தமிழகத்தில் வாழ்ந்த தறுகண்மை மிக்க பெருவீரர்கள், தம் நாட்டு மக்கள் போரில் பகைவரை வென்று வெற்றி பெறுதல் வேண்டுமென்னும் உயர்ந்த குறிக்கோளுடன் தம்முயிரையே, அவிப்பலியாக-1 பலிப் பொருளாகத் தந்து வெற்றித் தெய்வமாகிய கொற்றலையை வழிபட்டார்கள் என்பது பழந்தமிழ் நூல்களாலும் பிற்காலத்தில் வீரர்களைப் பற்றி வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களாலும் அறியப்படும் வரலாற்றுச் செய்தியாகும். இவ்வாறு தம்முயிரையே அவிப்பலியாகத் தந்து தெய்வத்தை வழிபடும் நெஞ்சத் திண்மை வாய்க்கப் பெறாது கோழைகளாகிய பிற்காலத்தார், தாம் விரும்பிய காரியம் நிறைவேற வேண்டித் தம்முயிர்க்கு ஈடாக ஆடு கோழி முதலான சிற்றுயிர்களையே தெய்வத்துக்குப் பலியாக இட்டு வழிபடத் தொடங்கினர். இத்தீய பழக்கமே பிற்காலத்தில் நாடு முழுவதும் எளிதிற் பரவுவதாயிற்று. இவ்வாறு மக்கட் குலத்தார் பகைவரை வெற்றி கொள்ளுதல், தம் உடம்பின் நோய் நீங்குதல் முதலிய பலன்களைப் பெறுதல் வேண்டித் தம்மைத்தாம் பாதுகாத்துக் கொள்ளும் வன்மையில்லாத எளிய உயிர்களைத் தெய்வத்துக்குப் பலியாக இடும் கொலைப் பழக்கத்தை மேற்கொண்டனர். இதனால் தெய்வத்துக்குப் பலியிடப்பட்ட உயிருடம்பின் ஊனினை நிவேதனப் பொருளாகக் கொண்டு புலால் உண்ணும் பழக்கமும் நாளடைவில் மிகுதிப்படுவதாயிற்று. இவ்வாறு தெய்வ வழிபாட்டில் சிற்றுயிர்களைக் கொன்று பலியிடுதலாகிய இச்செயல், மக்களது பகுத்தறிவுக்கும் எல்லாவுயிர்களிடத்தும் நிறைந்திருக்கும் இறைவனது திருவருட் குறிப்பிற்கும் ஏலாத மூடப்பழக்கமென்பதனை அருளாளர் அனைவரும் நன்குணர்வர். மக்களின் அறிவு