பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


கொல்லா விரதமொன்று கொண்டோரே நல்லோர்மற்
றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே

(பரா - 192)

எனவும்,

கொல்லா விரதங்குவலய மெல்லா மோங்க
எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே

(பரா - 54)

எனவும் தாயுமானப் பெருந்தகையார் நெஞ்சம் நெகிழ்ந்துரைக்கும் வாய்மொழிகள் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் அருளுடைய மெய்யடியார்கள் உள்ளத்திலே நிலைபெற்றுள்ள உயிரிரக்கப் பண்பினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

புலாலுணவுண்பதில் பெருவிருப்பமுடையார் சிலர், மக்களை நலியும் சிறுதெய்வங்களாக நாட்டிலே பல பெயர் தந்து நாட்டி அத்தெய்வங்களுக்குப் பலியிடுதற்கென ஆடு, கோழி முதலியவற்றை ஆரவாரத்துடன் கொண்டு செல்லும் கொடுமையைக் கண்ட இராமலிங்க அடிகளார், புந்தி நொந்து உளம்நடுக்குற்றார். இத்தகைய தீமைக்குச் சார்பாக அமைந்த சிறுதெய்வக் கோயில்களைக் கண்டகாலத்திலும் அவற்றை அஞ்சி விலகினார்.

நலி தரும் சிறிய தெய்வ மென்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதரும் ஆடு பன்றி குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும்கண்டே
புந்தி நொந்துளம் நடுக்குற்றேன்