பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


தமிழாகிய திருமுறைகளை ஒதிவழிபட்ட இராமலிங்க வள்ளலாரும் பிறர் துணையின்றிக் கலைநூல்களைத் தாமே பயின்றுணரும் புலமைநலம் பெற்று ஒதாதுனர்ந்த மாதவச் செல்வராயினார் என்பது அவர்தம் வாழ்க்கை வரலாற்றால் இனிது புலனாகின்றது.

தாம் பள்ளியிற் சென்று பிறர்பாற் கல்விபயிலாத நிலையில் தம்முள்ளத்திருந்து கலை நூல்களை அறிவுறுத்திய குருவும், ஒன்பதாம் ஆண்டளவாகிய இளமைப் பருவத்திலேயே தன் திருவருளுக்குரிமை செய்து தன்பொருள்சேர் புகழ்த்திறங்களைச் செந்தமிழாற் பாடச்செய்தருளிய தெய்வமும் ஆகத் திகழ்பவன் எல்லாம் வல்ல குமாரசிவமாகிய கூத்தப்பெருமானே என்னும் இவ்வுண்மையினை,

ஏதுமறியா திருளில் இருந்த சிறியேனை
எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
ஓதுமுறை முதற்கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
தீதுநெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திருஅருள்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான் மருளும்
போதுமயங் கேல்மகனே என்று மயக்கெல்லாம்
போக்கி எனக்குள்ளிருந்த புனித பரம்பொருளே

(3053)

ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கத் தெரியா
தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கவுனைப் பாடி
விரும்பியருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ