பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153


சிவஞானம் பெற்ற ஞானிகளுக்கும் பழக்க வாசனையால் அவர்தம் அறிவு புறத்தே செல்லுதல் கூடும். அவ்வாறு தம் அறிவு புறத்தே செல்லாதவாறு மடக்கி அகத்தே ஒருகுறியின் கண் நிறுத்தி நிட்டைகூடும்படி திருவைந்தெழுத்தை ஒதும் முறையில் உள்ளத்தே வைத்துச் சிந்திக்கச் சிந்திக்கச் சிந்தனையானது, புறத்தே செல்லும் நோக்கத்தைப் பற்றறக் கெடுத்து, ஞானசொரூபத்தை இனிது விளக்கி ஈறிலின்பமயமான பூரண நிலையிற் கொண்டு செலுத்தும். ஆதலால் சித்தத்தே இறைவனைச் சிந்தித்து வழிபடுவோர் அப்பூசைக்கு அங்கமாக அகத்தே செய்தற்குரிய தியானத்தையும் திருவைந்தெழுத்தைச் சாதனமாகக் கொண்டே செய்தல்வேண்டும் எனவும், அவ்வாறு செய்யும் முறையில் இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவன் எனவும், அந்நிலையில் ஆன்மாவுக்கு ஆண்டானடிமைத் திறம் இனிது வாய்க்குமெனவும் வற்புறுத்துவது,

அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் -அஞ்செழுத்தாற்
குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு.

என வரும் சிவஞானபோத வெண்பாவாகும், இதன்கண் குண்டலி என்றது உந்தித்தாமரையை. இதுவே அகப்பூசைக்குரிய வேள்வித்தானம். இதயம் என்றது நெஞ்சத் தாமரையை. இது அகப்பூசைக்குரிய பூசைத் தானமாகும். கோதண்டம் என்றது. புருவநடுவினை. இது தியானத் தானமாகும். சானித்தல்-தியானித்தல். அண்டன் என்றது, எல்லா அண்டங்களையும் இயக்கும் இறைவனை. சேடன் என்றது அம்முதல்வனுக்கு என்றும் அடிமைத் திறத்தினனாகிய ஆன்மாவை. இங்ஙனம்