பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167


களிய மாமயல் காடற எறிந்தாங்
காரவேரினைக் களைந்து மெய்ப்போத
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
ஒற்றிமேவிய உலகுடையோனே

(திருவருட்பா 1117)

எனவரும் இப்பாடலில் 'அளிய நெஞ்சம் ஒர் அறிவுருவாகும் அன்பர்' என்றது, இறையருளால் அளிதரும் ஆக்கையைப் பெற்றுச் சிவஞானமே உருவாகத் திகழ்ந்த மணிவாசகப் பெருமானை. இங்கு 'ஒர் அறிவுருவமாகு மன்பர்' என்ற தொடர், 'மாணிக்கவாசகர் அறிவினாற் சிவமே என்பது திண்ணம்' என்ற இலக்கணக் கொத்தின் நூலாசிரியரான சுவாமிநாத தேசிகர் கூறிய மொழியினை நினைவுபடுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம்.

நமது நாட்டில் வழங்கும் சமயங்களை ஆறு சமயங்களாகத் தொகுத்தும், பின் அவற்றையே அகச் சமயங்கள் ஆறு, புறச் சமயங்கள் ஆறு எனப்பகுத்தும் கூறுவர் முன்னுள்ளோர். அகமும் புறமுமாகிய சமயங்களிடையே யமைந்த வேறுபாடுநோக்கி அகம், அகப்புறம் புறம், புறப்புறம் என நான்காகப் பிரித்துக்கூேறுவர் சிவ ஞான முனிவர். தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறியபொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிரு படலத்தில் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனப்பகுத்தோதியவாறு போல்வது இப்பகுப்புமுறையாகும்.

அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
அடுத்திடும் புறப்புறம் நான்கில்

(3640)

எனவரும் திருவருட்பா பாடற்றொடரில் இப்பகுப்பு முறை இடம் பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.