பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174


மையால் ஞானத்தில் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்னும் நால் வகை நெறிகளையும் குறித்ததே சன்மார்க்கம் என்ற இச்சொல் என்பது நன்கு புலனாகும்.

இத்தகைய சன்மார்க்க நெறியானது. எல்லாம்வல்ல சிவபெருமானால் உயிர்கள் உய்தற் பொருட்டு வகுத்தருளிச் செய்யப்பட்டது என்றும், இறைவனே குருவாய் எழுந்தருளி முனிவர் பெருமக்களுக்கு அருளிச் செய்ய அவர்கள் வழியே ஆசிரியர்-மாணவர் என்னும் வழிமுறையில் நாட்டில் தொடர்ந்து நிலை பெற்று வருவதாதலின் இதனைக் குருநெறி என்றும், சிவபரம் பொருளால் அருளிச் செய்யப் பெற்றமையின் சிவநெறி என்றும் வழங்குவர் திருமூலதேவர். இவ்வுண்மை,

சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்து வைத்தானே

(திருமந் 1478)

எனவரும் திருமந்திரத்தால் புலனாதல் காணலாம்.

'உயிர்களைச் சிவத்துடன் ஒன்றுமாறு உணர்த்தும் சிவசமயத்தின் தனி முதல்வனாகிய இறைவன் ஆன்மாக்கள் பாசப்பிணிப்பினின்று விடுபட்டு உய்தி பெற வகுத்தருளிய உபதேச நெறியாகிய குருநெறி ஒன்றுள்ளது. அதுதான் சிவமாந்தன்மைப் பெருவாழ்வை நல்கும் சிவநெறியாகும். சன்மார்க்கமாகிய அதனைச் சேர்ந்து உய்திபெற உலகில் வாழ்வார்க்கு வகைபெற விளக்கி வைத்தருளினான் நந்தியாகிய இறைவன்” என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். சத்+ மார்க்கம் என்னும் வடமொழித் தொடரில் சத்= என்றது